
இந்தப் பூமியில் நாங்கள் தனித்தே வாழ்கிறோமா?உலகத்துக்கு வெளியே எங்காவது உயிரினங்கள் உள்ளனவா?
பல நூற்றாண்டுகளாய் நீடிக்கின்ற இந்தக் கேள்விக்கு விடை காண்கின்ற முயற்சிகளில் முக்கியமானதும் இறுதியுமான தருணத்தை மனிதகுலம் இன்றிரவு கடக்கின்றது.
பல தசாப்த கால வேலைத்திட்டங்கள், பில்லியன் டொலர்கள் செலவு, ஏழுமாதகால விண்வெளிப்பயணம், கொரோனாவுக்கு மத்தியில் கடுமையான கூட்டு முயற்சிகள் போன்றவற்றின் இறுதிப் பெறுபேறாக “விடாமுயற்சி” (Perseverance) எனப் பெயரிடப்பட்ட ரோவர் விண்கலம் இன்றிரவு செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது.
சிறிய ரோவர் கலத்துடன் முதல் முறையாக அதி நவீன ட்ரோன் மினி ஹெலிக்கொப்டர் ஒன்றும் இணைந்த இந்த விண்வெளித் திட்டம் செவ்வாயில் உயிர்வாழ்க்கையைத் தேடுகின்ற மனித முயற்சிகளில் மிக முக்கியமான ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
அறிவியல் உலகம் மிகவும் பரபரப்புடனும் பதற்றத்துடனும் எதிர்பார்த்திருக்கின்ற தரையிறக்கம் பிரான்ஸ் நேரப்படி இன்றிரவு 21.55 மணிக்கு நிகழும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பூமியில் இருந்து எந்த வழி நடத்தலும் இன்றித் தானாகவே செவ்வாய்க் கிரகத்தின் கடினமானதொரு தரைப்பரப்பில் தரையிறங்க இருப்பதால் அது தரையைத் தொடவுள்ள இறுதி “ஏழு நிமிடங்கள்” மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இறுதிக் கணங்களை அவதானிப்பதற்காக விண்வெளி ஆய்வு நிலையங்களில் விஞ்ஞானிகள் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
நாஸா விஞ்ஞானிகளுடன் பிரான்ஸின் அறிவியலாளர்கள் இணைந்து கூட்டாக வடிவமைத்த “விடாமுயற்சி” விண்கலத்தின் அதி நவீன தொழில் நுட்பப் பாகங்கள் அனைத்தும் பிரான்ஸின் துளூஸ்(Toulouse) ஆராய்ச்சி நிலையங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
அமெரிக்கா – பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்களது கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் அதிபர் எமானுவல் மக்ரோன்,ஏழு மாதகால பயணத்துக்குப் பின்னர் ரோவர் விண்கலம் செவ்வாயின் தரையைத் தொடவுள்ள மிக முக்கிய ஏழு நிமிடக் காட்சிகளை அறிவியலாளர்களோடு சேர்ந்து பார்வையிடவுள்ளார்.
விண்கலம் தரை இறங்குவதைப் பார்வையிடுவதற்காக பாரிஸ் நகரின் மத்தியில் அமைந்துள்ள விண்வெளிக் கற்கைகள் தலைமை நிலையத்துக்கு (Center national d’Études Spatiales – Cnes) மக்ரோன் இன்றிரவு விஜயம் செய்ய வுள்ளளார் என்று எலிஸே மாளிகை அறிவித்துள்ளது.
அங்கிருந்தவாறு விண்கலத்தின் தரையிறக்கத்தைப் பார்வையிடவுள்ள அவர், துளுஸில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்களுடன் வீடியோ மூலமாகக் கலந்துரையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்புக் கிரகத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கக் கூடும் என நம்பப்படுகின்ற பகுதிகள் மீது பறக்கவுள்ள ட்ரோன் ஹெலி, அங்கு பண்டைய உயிர்த் தடயங்களைத் (traces of ancient microbial activity) தேடவுள்ளது. அதி நுட்பமான கமராக்களுடன் ஓலிகளைப் பதிவு செய்கின்ற நுண்ணிய ஒலிப்பதிவு கருவிகளும் (microphones) அதில் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட சிறிய விண்கலங்கள் அனுப்பிய படங்கள் மூலமான ஆதாரங்களை உறுதிப்படுத்துவதுடன்
அங்கு உயிரின் தடயங்களை நேரடியாக ஆய்வு செய்கின்ற பணியில் “விடாமுயற்சி” விண்கலம் ஈடுபடவுள்ளது
குமாரதாஸன். பாரிஸ்.
18-02-2021