தனது ஆட்சியில் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் ஊழல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களை மறைப்பதற்கே மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருப்பதானது அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்ற ஆசையிலேயே.
தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தாலே தனது ஆட்சியில் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் ஊழல்களிலிருந்து மஹிந்த தப்பிக்கொள்ள முடியும் என ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்வாராயின் அது மக்கள் வழங்கிய ஆணையை மீறும் செயலாகும்.
மீண்டும் அரசியலுக்கு வர மஹிந்த விரும்புவது அதிகாரம் மீது அவர் கொண்டிருக்கும் ஆசையை பிரதிபலிக்கிறது.
ஜனாதிபதியாகத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அவர் பிரதமராக போட்டியிடும்போது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது என்றும் அவர் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்வாரா என்பது எமக்குத் தெரியாது. அவ்வாறு அவர் ஏற்றுக்கொண் டால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகவே அது அமையும்.
இதேநேரம், குடுக்காரர்கள், எதனோல் காரர்கள், விபசாரத் தொழிலில் ஈடுபடுபவர்களை மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யாமல் ஒழுக்கமானவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் கடப்பாடு வாக்காளர்களான நாட்டு மக்களுக்கு உள்ளது. இதனை சரியாகச் செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் அதிகமாகக் காணப்பட்டன. வெளிமாவட் டங்களிலிருந்து கொழும்புக்கு சுற்றுலாவரும் பாடசாலை மாணவர்கள் முன்னர் மிருகக்காட்சிசாலை, நூதனசாலை மற்றும் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டுச் செல்வதே வழமை.
ஆனால் கடந்த காலங்களில் சுற்றுலாவரும் மாணவர்கள் மிருகக்காட்சி சாலையை பார்வையிட்டு விட்டு அப்படியே திரும்பி விடுகின்றனர். மிருகக்காட்சி சாலையைப் பார்வையிட்டால் பாராளுமன்றத்தைப் பார்வையிடத் தேவையில்லையென்ற எண்ணம் இருந்தது. இந்த நிலைமையை மாற்றக்கூடிய பொறுப்புவாய்ந்தவர்களை பாராளுமன்றத் துக்கு மக்கள் அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தேர்தலில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஹந்துன்நெத்தி,
“நமக்கு புதிய பொருட்களே தேவை. பழயைவை அல்ல. புதிய கடையொன்றை கட்டி அதில் பழைய பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது பொருத்தமானதல்ல” என்றார்.