யாழ்ப்பாணத்தில் மூவருக்கு மரண தண்டனை!

0
177

court-_81யாழ்ப்பாணம் கச்சாய் மற்றும் மந்துவில் பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 3 பேருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மகனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீடு புகுந்து தந்தையை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கொடிகாமம் கச்சாய் பகுதியில் நடைபெற்றிருந்தது. இச் சம்பவத்தில் செல்லையா பொன்னுராசா என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் தொடர்பாக சிவபாலு கிருஸ்ணகுமார் (வயது 45), சுந்தரலிங்கம் செந்தில்குமார் (வயது 30) என்னும் இருவர் கைது செய்யப்பட்டி ருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக வழக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. இவ்வழக்கு தீர்ப்பிற்காக நேற்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணைகளின் முடிவில் மன்றில் ஆஜர் செய்யப்பட்ட இருவரையும் மன்று குற்றவாளியாக கருதி இருவருக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மந்துவில் கிழக்கு கொடிகாமப் பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளையவன் குஞ்சையா என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் ஆனந்தம் ஏஸ்லிம் (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. குறித்த வழக்கினை தொடர்ச்சியாக தற்போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக உள்ள அ. பிரேமசங்கர் விசாரணை செய்த காரணத்தினால் இவ் வழக்கிற்கான தீர்ப்பினை வழங்குவதற்கு விசேட நீதிபதியாக பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டிருந்தார். இதன்படி நேற்று குறித்த வழங்கு தீர்ப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது மன்றில் ஆஜர் செய்யப்பட்டவர் குற்றவாளியாகக் கண்டு அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here