இலங்கை நிலைமை மோசமாவதால் சுவிஸின் புகலிட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை!

0
503

சுவிஸ் அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவது தொடர்பான தனது நடைமுறைகளை மீளப் பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்நாட்டின் அகதிகள் உதவி அமைப்பு (Swiss Refugee Assistance Organization – OSAR) கேட்டிருக்கிறது.குடியேற்றவாசிகள் தொடர்பாக முன்னர் நல்லிணக்க அரசுடன் செய்து கொண்ட அகதிகளைத் திருப்பி அனுப்பும் உடன்படிக்கையை (bilateral immigration treaty) சுவிஸ் இடை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் சிவில் நிலைமைகள் மோசமடைந்து வருவது குறித்து தனது பிந்திய அறிக்கை ஒன்றில் கவலை வெளியிட்டிருக்கின்ற சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரது அண்மைய பரிந்துரைகளுக்கு ஏற்ப இலங்கை அகதிகளுக்குத் தஞ்சம் வழங்குதல், அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் தொடர்பான நடைமுறை களை சுவிஸ் சமஷ்டி அரசின் குடியேற் றத்துக்கான செயலகம்(State Secretariat for Migration- SEM) மீளப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து நல்லிணக்க நிலைமை தோன்றியதை அடுத்து கடந்த 2016, 2018 ஆண்டுகளில் அன்றைய சிறிசேனா அரசுடன் சுவிஸ் அரசு பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டிருந்தது.

தொழில் நிமித்தம் குடியேறுவோர், அகதிகள், தஞ்சம் மறுக்கப்பட்ட அகதிகளைத் திருப்பி அனுப்புதல், குடியேறிகள் பரிமாற்றம் ஆகியனவற்றை உள்ளடக்கிய அந்த உடன்படிக்கைக்கு அது கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட சமயத்தில் சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பும், சர்வதேச மன்னிப்புச் சபையும் கண்டனம் வெளியிட்டிருந்தன.

அண்மையில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட இலங்கை நிலைவர அறிக்கை இலங்கையர் களுக்குத் தஞ்சம் வழங்குகின்ற உறுப்பு நாடுகள் தங்கள் புகலிடக் கொள்கைகளை மீளப் பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அகதிகள் நலன் பேணும் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு கைது, சித்திரவதை போன்ற மீறல்களுக்கு மீண்டும் ஆளாக நேரிடலாம் என்று அந்த அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

சுவிஸ் நீதி அமைச்சின் தகவலின்படி அந்நாடு சுமார் 51 ஆயிரம் இலங்கை அகதிகளுக்குப் புகலிடம் வழங்கி உள்ளது. அவர்களில் அரைவாசிப் பங்கினர் சுவிஸ் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். மொத்த இலங்கை அகதிகளில் 95 வீதமானவர்கள் ஈழத் தமிழர்கள் ஆவர்.

(படம் :நன்றி OSAR)

குமாரதாஸன். பாரிஸ்.
12-02-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here