மூன்றாம் படையினர் (கைக்கூலிகள்) ஊடாகத் தாக்குதலை நடாத்தி எமக்கிடையே விரிசல்களையும் எதிர்ப்புநிலையையும் உருவாக்குவதாகவே பார்க்கப்படுகின்றது என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:-
சிறிலங்கா அரசாங்க பயங்கரவாதத்தின் தொடர் நடவடிக்கை!
01.07.2015
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் புலம் பெயர்வாழ் மக்களுக்கும் உறவுப்பாலமாகக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட்டு வருகின்றது. இதன் செயற்பாடுகளை இலகுபடுத்தும் முகமாக பல உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தி அதனூடாக புலம்பெயர் நாடுகளின் அரசுகளுக்கும், அந்நாடுகளில் வாழும் மக்களுக்கும் எமது போராட்டத்தின் நியாயத்தையும், தேவையையும் தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவை விடுதலையின் பால் திருப்புவதில் பெரும் பங்குவகித்து வருகின்றது. இவற்றுக்குத் தமிழ் மக்களாகிய நீங்கள் ஆதரவை வழங்கி வந்துள்ளீர்கள், தொடர்ந்தும் ஆதரவை வழங்கி நிற்கின்றீர்கள்.
2002 இல் நோர்வே மத்தியத்துடன் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அமெரிக்காவைத் தொடர்ந்து 2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக்கொண்டன. இதன் விளைவாக 2007 ஏப்ரல் 1 ஆம் திகதி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை தலைமை தாங்கி நடத்திய சமூக செயற்பாட்டாளர்களை பிரான்சு காவல்துறை கைதுசெய்தது. இதன் காரணமாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் தளர்வுகண்டன. ஆனாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்புகள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்தன. அதன்போதும் தமிழ் மக்களின் பூரண ஆதரவு எமக்குக் கிடைத்த வண்ணமே இருந்தது.
2009 இல் தமிழரின் தாயகத்தில் நிழல் அரசு 20 இற்கு மேற்பட்ட வெளிநாடுகளின் உதவியுடன் அழிக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன.
ஆனால், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தனது செயற்பாட்டை 2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையில் தேசியத் தலைவர் கூறியதுபோல் போராட்டமானது களம் மாறியதுடன், போராட்ட வடிவமும் மாறிக்கொண்டது. புலம்பெயர் தமிழர்களே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்றும், அதைப் புலம்பெயர்வாழ் இளைஞர்கள் தம்கையில் எடுக்கவேண்டுமெனக் கூறியதன் அடிப்படையில் போராட்டமானது இளைஞர்களால், முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கான ஆதரவுப்பலத்தை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் வழங்கப்பட்டு வருகின்றது.
இன்று சர்வதேச நாடுகள் நோக்கிய சனநாயக அரசியல் பணிகள் தொடர்கின்றன. விடுதலைப்போராட்டம் வன்னியில் இருந்து ஐ.நா. சபைக்கும், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் மாற்றப்பட்டுவிட்டது. அங்கு நடைபெறும் போராட்டங்கள், இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இன்று இந்த செயற்பாடுகளின் வெளிப்பாடு ஐ.நாவிலும், ஐரோப்பிய மன்றத்திலும் எதிரொலிப்பதைக் காணலாம். இச்செயற்பாட்டுக்கான ஆதரவுப் பலத்தை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களே கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
2009 இல் ஏற்பட்ட கால வெளியில் பல அமைப்புக்கள் தோற்றம்பெற்றன,தோற்றுவிக்கப்பட்டன. 2009இக்கு பின் தாயகத்தில் விடுதலை போராட்டத்தை அழித்து விட்டதாக கூறிய சிறி லங்கா அரசு புலம் பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கட்டமைப்புகளை அழிக்கும் செயல்பாடுகளில் இறங்கியது, என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதன் ஆரம்பகட்ட முயற்சியே 2007ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சமூக செயல்பாட்டார்களின் கைது. அது வெற்றி அளிக்காத நிலையில் 2009யில் மீண்டும் அதற்கான முயற்சிகள் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிரான போட்டி அமைப்புக்கள் உருவாகி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டுக்கு விரோத செயற்பாடுகளை செய்து மக்களிடையே குழப்பம் விளைவிக்க எத்தனித்தது. அப்போது தமிழ் மக்கள் உண்மை நோக்கம் அறிந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பின்னால் அணிதிரண்டார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தனது பணியில் கண்ணாக இருந்து புலம்பெயர் மண்ணில் எமது போராட்ட அடையாளங்களைத் தாங்கிய தபால் தலைகள், பலபோட்டி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், ஜெனிவா நோக்கிய அதிவேகத் தொடருந்து பயணம் போன்ற பல நிகழ்வுகள் மக்கள் எழுச்சி ஊடாக மக்களோடு கைகோர்த்து நின்றது. இச்செயற்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கோடும் மாவீரர் நாளைத் தோல்வியடையச் செய்யும் நோக்கோடும் 2011 நவம்பர் மாதம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்கள் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டார். எனினும் மாவீரர் நாள் நினைவேந்தல் எழுச்சியுடன் நடைபெற்றது.
2012 நவம்பர் 8 இல் கேணல் பரிதி அவர்கள் கைக்கூலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போதும் 2012 மாவீரர் நாள் வழமைபோன்று மிக எழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது. 2013 ஜெனிவா நோக்கிய அதிவேகத்தொடருந்துப் பயணமும் முன்னெடுக்கப்பட்டது.
2014 செப்ரெம்பர் மாதம் எமது போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று கொண்டிருந்த ‘ஈழமுரசு’ பத்திரிகை, துப்பாக்கி மிரட்டல் மூலம் நிறுத்தப்பட்டது. அது சட்டரீதியாக அணுகப்பட்டு குற்றவாளியும் இனங்காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து 04.03.2015 இல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் தாக்கப்பட்டார்.
தற்போது 18.06.2015 இல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளரும் தாக்கப்பட்டுள்ளார்.
இன்று சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் மண்ணில் விடுதலைக்காகக் குரல்கொடுக்கும் அமைப்புகளையும் தனிமனிதர்களையும் தடைசெய்துகொண்டு இங்கு விடுதலைக்காக உழைக்கும் மக்களிடையே மிரட்டல்கள் மூலம் பயமுறுத்திச் செயற்பாடுகளை ஒடுக்கும் பணிகளை முன்னரைவிட வேகமாக முடுக்கிவிட்டுள்ளது. இதில் உண்மையாக உழைப்பவர்களிடையே உள்ள கருத்து முரண்பாட்டைச் சாதகமாக்கி மூன்றாம் படையினர் (கைக்கூலிகள்) ஊடாகத் தாக்குதலை நடாத்தி எமக்கிடையே விரிசல்களையும் எதிர்ப்புநிலையையும் உருவாக்குவதாகவே பார்க்கப்படுகின்றது. அண்மையில் வெளிநாட்டமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இசைவாக இங்கு வன்முறைகளைச் செய்து விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்திரிக்க எண்ணுவதோடு எமது செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பது தெட்டத் தெளிவு .
புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களே!
எமது போராட்டம் தூய்மையானது. நீண்ட பார்வை கொண்டது. இன்று இத்தனை சவால்கள் ஊடாக எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் எமது பணிகளைச் செய்வதைத் தடுக்க பாரிய தடைகளும் பொய்யான பரப்புரைகளும் நடாத்தப்படுகின்றன.
இந்தப் போராட்டத்தை முன்னகர்த்தி செல்ல நூற்றுக்கணக்கானோர் பல தியாகங்களை செய்து செயற்படுகின்றார்கள். வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் விசாரணைக்கு பின்னான தீர்மானம் வர இருக்கிறது – அச் சூழலில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் பல போராட்டங்களில் ஈடுபட இருக்கிறார்கள்.
இந்தப் போராட்டங்களை மழுங்கடிக்க வேண்டிய தேவை சிறி லங்கா அரசுக்கும், அவர்களுடன் இணைந்து செயற்படும் நாடுகளுக்கும் இருக்கிறது. அதன் முன் இவ்வாறான போராட்டங்களை முன் நகர்த்தும் கட்டமைப்புகளை அழிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக கூறப்படும் தமிழீழ விடுதலை புலிகளுக்கான தடையை நீடிக்க காரணங்களை உருவாக்குவது, போன்ற விடயங்களை முன்னகர்த்த வேண்டிய அவசியம் சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது. அண்மையில் அமெரிக்க ராஜாங்க அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி விட்ட அறிகையை யாவரும் அறிவீர்கள் அதே நேரத்தில் ஐரோப்பிய நீதி மன்றத்தின் முன் விடுதலை புலிகள் மீது போடப்பட்ட தடையை நீக்கக்கோரி வழக்கு ஒன்றும் இடம்பெற்று கொண்டிருப்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
இன்று ஏற்படுத்த பட்டிருக்கும் சூழல் தொடர்தும் பல காலமாக எமது போராட்டத் தளங்களை அழிக்க விடப்பட்டிருக்கும் சவாலாகும். இதை எதிர் கொள்ள வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது.
எந்த வித பிரச்சனைகள் வந்தாலும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு எதற்காக உருவாக்கப்பட்டு 30 வருடங்களாக செயல்படுகிறதோ எமது மக்களுக்கான சேவையையும் விடுதலை போராட்டத்தையும் நாம் உறுதியுடன் முன்னகர்துவோம் என்பதை எமது மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். எம்முடன் சேர்த்து செயல்படும் அத்தனை உப கட்டமைப்புகளும் தமது சேவைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன.
இன்று ஏற்பட்டிருக்கும் இந்த சூழலையை எதிர் கொள்ளவேண்டிய நிலையில் நாம் இருந்தாலும், எமது மக்களுக்கான விடுதலை நோக்கிய செயல்பாடுகளை எமது உட்கட்டமைப்புகள் செய்து கொண்டே இருக்கின்றன. இன்று உங்கள் இடையே விடப்பட்டிருக்கும் பிரசாரங்களின் பின்னணியை புரிந்து கொண்டு எமது மக்களுக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை வேகத்துடன் முன்னர்கர்த்த நீங்கள் தொடர்ந்து, எமது மக்கள் விடுதலைக்கு தந்து கொண்டிருக்கும் தார்மீக ஆதரவை தொடர்ந்து தருவீர்கள் என்ற நம்பிகையுடன், எமது தேசியத் தலைவரின் சிந்தனையுடன் நாம் எமது செயல்பாடுகளை தொடர்ந்து நடத்துவோம் என்பதை நாம் மீண்டும் உறுதி செய்துகொள்கிறோம்.
நன்றி!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!