பாரிஸில் கடும் குளிர் நிலவுவதால் இருப்பிடம் இன்றி வீதிகளில் அந்தரிப்பவர்கள் தங்குவதற்கான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் சூடான உணவு மற்றும் பானங்களுடன் தங்கும் இட வசதிகளை பொலீஸ் தலைமையகங்கள் ஏற்பாடு செய்துவருகின்றன. உள்ளக விளையாட்டரங்குகள் இதற்காகப் பெறப்பட்டுள்ளன.
பாரிஸ் மூன்றாவது வட்டாரத்தில் இயங்கும் ‘Carreau du temple’ எனப்படும் பழைய மூடிய சந்தைக் கட்டடம் ஆதரவற்றோர் தங்குவதற்காகத் திறக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
வீடற்றோர், தனித்து விடப்பட்ட பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு அங்கு படுக்கை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பாரிஸ் பிராந்திய பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Adresse : Le Carreau du Temple, 2 rue Perrée, 75003 Paris
Métro : Ligne 3 – Temple / Ligne 5, 8, 9, 11 – République.
இதேவேளை – தெருக்கள் மற்றும் கூடாரங்களில் வசிப்போருக்கு அரசு தங்கும் இடங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ கோரியிருக் கிறார். கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து வீடிழந்தோர் ஆதரவற்றவர்கள் எனப் பலர் வீதிகளுக்கு வந்துள்ளனர். அத்தகையோர் தற்போது உருவாகி இருக்கும் கடும் குளிரில் சிக்கும் ஆபத்து உள்ளது. இவர்களுக்கான விசேட இரவு-பகல் தங்கும் விடுதிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் – என்று மேயர் கேட்டுள்ளார்.
கடும் குளிர் (“Grand Froid”) அவசரகாலத் திட்டங்கள் தொடர்பாக நகர சபை விவாதித்து வருகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.09-02-2021