பிரான்சில் நாளை சில பள்ளிகள் இயங்காது மாணவர் பேருந்து சேவைகளும் ரத்து!

0
111

பாரிஸ் பிராந்தியத்தில் பனி மற்றும் உறைபனி காரணமாக நான்கு மாவட்டங்களில் நாளை புதன்கிழமை பாடசாலை பஸ் சேவைகள் நிறுத்தப் பட்டுள்ளன. Yvelines மாவட்டப் பாடசாலைகள் அனைத்தும் நாளை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

Seine-et-Marne, Val d’Oise, Essonne ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகள் நாளை இயங்கும். ஆனால் மாணவருக்கான பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட பொலீஸ் தலைமையகங்கள் அறிவித்துள்ளன.

தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற சீன் – சென்-துனி (Seine-Saint-Denis) மற்றும் பாரிஸ் நகரப் பகுதிப் பாடசாலைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இதனை எழுதும் வரை வெளியாகவில்லை.

இதேவேளை, வாகன விபத்துகள், போக்குவரத்து முடக்கம் ஆகிய சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக N118 தேசிய நெடுஞ்சாலை இன்றிரவு ஒன்பது மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெபரவரியில் குளிர் காலத்தின்போது இந்த நெடுஞ்சாலை யில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் நெரிசல்களைக் கவனத்தில் கொண்டே இந்த தடவை முன் கூட்டியே வீதியை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பனி, உறைபனி, கடும் குளிர் காலநிலையை எதிர்பார்த்து பாரிஸ் உட்பட இல்-து- பிரான்ஸின் மாவட்டங்களுக்கு இன்று காலை முதல் செம்மஞ்சள் (vigilance orange) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இல் – து-பிரான்ஸின் Paris, Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de -Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d’Oise மாவட்டங்கள் கடும் குளிர் நிலவும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து நாடெங்கும் 36 மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கைக் குறியீட்டின் கீழ் உள்ளன.

(வரைபடம் : Météo France)

குமாரதாஸன். பாரிஸ்.
09-02-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here