2003 ஆம் ஆண்டின் பின்னர் ஐரோப்பாவில் வெப்ப நிலை இந்த வாரம் அதி உச்சத்துக்குச்செல்கிறது. உயிராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வெப்ப அலை பரவத் தொடங்கியிருப்பதை அடுத்து பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியன பொதுமக்களுக்கு காலநிலை எச்சரிக்கைகளை விடுத்திருக்கின்றன.
பாரிஸ் நகரில் இன்று பிற்பகல் 36 C வரை சென்ற வெப்ப நிலை நாளை மாலைக்குள் 40 ஐ எட்டலாம் என்று எதிர்பார்ப்பதால் தேசிய அனல் அலைக் கால அவசர நிலை நடைமுறைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் 40 டிப்பாட்மென்ற் பகுதிகளில் vigilance orange எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கடும் வெப்பத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு அவற்றைப்பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட ஆபிரிக்காவிலிருந்து ஜரோப்பா நோக்கி நகரும் அனல் காற்றே தற்போதைய கடும் வெப்பத்துக்குக் காரணம் என்று வானிலை அவதான மையம் தெரிவித்திருக்கிறது. கடைசியாக 2003 ஆம் ஆண்டு ஜரோப்பாவில் வெப்பநிலை அதிகரித்த இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் பிரான்ஸில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என மதிப்பிடப்பட்டது.இவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் தனித்து விடப்பட்ட வயோதிபர்கள் ஆவர்.