பாரிஸ் பிராந்தியம் உட்பட பிரான்ஸின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிரும் பனிப்பொழிவும் நாளை முதல் எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் வடக்கு மேற் பகுதிகளில் (Hauts-de-France) வெப்பநிலை மைனஸ் 10 பாகை வரை வீழ்ச்சியடையலாம் என்று தெரிவிக்கப் படுகிறது.
ஸ்கன்டிநேவியாவில் இருந்துவரும் கடும் குளிர் புயல் காற்றினால் வெப்பநிலை சில பகுதிகளில் மைனஸ் 10-15 பாகை வரை வீழ்ச்சியடையக்கூடும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
பிரான்ஸின் பல மாவட்டங்கள் ஏற்கனவே கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. அதேசமயம் ஐரோப்பா முழுவதும் கடும் பனிப் பொழிவைச் சந்தித்துள்ளது.பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவற்றைத் தொடர்ந்து பிரான்ஸும் இந்த வாரம் கடும் குளிரை எதிர்கொள்ளவுள்ளது.
🔴நெதர்லாந்தில் சிவப்பு எச்சரிக்கை
நெதர்லாந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளை வெண்பனி மூடிக்காணப் படுகிறது. இதனால் அங்கு ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன.
நெதர்லாந்தின் காலநிலை மையம்
(KNMI) நாடு முழுவதும் மிக அரிதான சிவப்பு எச்சரிக்கைக் குறியீட்டை(code red) வெளியிட்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக அங்கு இவ்வாறு பனிப் புயல் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.பத்து முதல் முப்பது சென்ரி மீற்றர்கள் பனிப் பொழிவு பதிவாகி உள்ளது.
தலைநகர் அம்ஸ்ரடாமில் உள்ள சிப்போல் (Schiphol) மற்றும் தெற்கே என்டோவன் (Eindhoven) விமான நிலையங்களில் வான் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பிரதான ரயில் மார்க்கங்களிலும் போக்குவரத் துகள் தடைப்பட்டுள்ளன.
வாகனங்கள் சறுக்கிய பல சம்பவங்களால் பெருந்தெருக்களில் ஆங்காங்கே விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்துகளைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மத்திய மற்றும் வடக்கு பிராந்தியங்களையும் கடும் பனி பாதித்திருக்கிறது.மக்கள் தொகை கூடிய
North Rhine Westphalia மாகாணத்துடனான ரயில் மற்றும் தரைப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹம்பேர்க் (Hamburg) – ஹனோவர் (Hanover) ஹம்பேர்க் – North Rhine Westphalia ஆகிய பகுதிகளுக்கு இடையிலேயே ரயில் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
நாடெங்கும் இடம்பெற்ற வீதி விபத்துகளில் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.
08-02-2021