பிரான்ஸில் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்(Olivier Véran) இன்று பகிரங்கமாகத் தொலைக்காட்சிக் கமராக்களின் முன்னால் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொண்டார்.
சுகாதார அமைச்சர் நாட்டில் பாவனைக்கு வந்துள்ள ‘அஸ்ராஸெனகா’ (AstraZeneca) தடுப்பு மருந்தின் முதலாவது ஊசியை ஏற்றிக் கொள்கின்ற காட்சியை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
மெலுன்(Melun hospital – Seine-et-Marne). மருத்துவமனையில் அவர் இன்று காலை தனக்குரிய தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பகிரங்கமாகப் பெற்றுக் கொள்கின்ற முதலாவது அரசாங்கப் பிரமுகர்
என்ற இடத்தை அவரே பெறுகிறார்.
சுகாதாரப் பணியாளர்கள் சகலருக்கும் தடுப்பூசி ஏற்றுகின்ற திட்டத்தின் கீழ் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரான ஒலிவியே வேரனும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தாதியர்கள், மருத்துவர்கள், நோயாளர் பராமரிப்போர் உட்பட சகல மருத்துவப் பணியாளர்களுக்கும் அடுத்த 15 நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்றும் பணி நிறைவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
பிரான்ஸின் சுகாதார அதிகார சபையால் கடந்த வாரம் பாவனைக்கு அனுமதிக் கப்பட்ட ‘அஸ்ராஸெனகா’ தடுப்பூசியின் 270,000 புட்டிகள் ஏற்கனவே நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
(படம் :France Blue screenshot)
குமாரதாஸன். பாரிஸ்.
08-02-2021