இன அழிப்பு, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.
தமிழர் இனப்படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதையும் தமிழ்மக்கள் தங்களுக்கான நீடித்த இறுதித் தீர்வைத் தெரிவு செய்வதையும் உறுதிப்படுத் துவதற்காக சர்வதேச கண்காணிப்புடன் வடக்கு – கிழக்கில் ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு (référendum) நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு பொலிகண்டி தீர்மானம் சர்வதேசத்திடம் கோருகின்றது.
இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து கடந்த ஐந்த தினங்கள் நடத்திய மாபெரும் எழுச்சிப் பேரணியின் முடிவில் பொலிகண்டியில் வெளியிடப்பட்ட கூட்டுத் தீர்மானத்தி லேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புகளின் அந்தத் தீர்மானப் பிரகடனத்தை எழுச்சிப் பேரணியின் முடிவில் மதகுரு வேலன் சுவாமிகள் வாசித்தார்.
தமிழர்கள் வரலாற்றில் திம்பு, வட்டுக் கோட்டை, சுதுமலை என்று முக்கிய திருப்புமுனைத் தீர்மானங்களின் வரிசையில் ஒன்றாக பொலிகண்டித் தீர்மானம் இன்று நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
கிழக்கு இலங்கையின் பொத்துவிலில் ஆரம்பித்து வடக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொலிகண்டி வரை – சுமார் 250 கிலோ மீற்றர்கள் தூரம் – பல நகரங்களைச் கடந்து முன்னகர்ந்த இந்தப் பேரணியில் கட்டம் கட்டமாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கெடுத் திருந்தனர்.
சமயத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடந்தும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள் களிலும் மக்கள் – குறிப்பாக இளையோர் – எழுச்சியுடன் திரண்டுவந்து பேரணியில் பங்கேற்றனர்.
இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு வடக்கு – கிழக்கு சிறுபான்மை இனங்கள் இணைந்து முன்னெடுத்த குறிப்பிடத் தக்க பெரும் மக்கள் பேரணியாக இது மதிப்பிடப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
07-02-2021