2019-2020 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் டிப்ளோமாக்களை நிறைவு செய்து விட்டு முதலாவது வேலைக்காகக் காத்திருக் கின்ற புலமைப் பரிசில் மாணவர்களுக்கு (jeunes diplômés boursiers) கொரோனா நெருக்கடி கால உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
மாதாந்தம் 500 ஈரோக்கள் என்ற அடிப்படையில் அடுத்த நான்கு மாதங்களுக்கு இக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தொழில் அமைச்சர் எலிசபெத் போர்ண் (Elisabeth Borne) தெரிவித்திருக்கிறார்.
இவர்களில் பெற்றோர் இன்றித் தனித்து வசிக்கின்ற மாணவர்களுக்கு மேலதிக மாக 100 ஈரோக்கள் சேர்த்து வழங்கப் படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் பெற்றுவந்த புலமைப்பரிசில் தொகையில் எழுபது வீதத்தை ஈடு செய்யும் இந்த உதவிப் பணத்தைப் பெறுவதற்குப் ‘போல் எம்புளுவா’ (Pôle Emploi) வேலை தேடும் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது கட்டாயம் ஆகும்.
இதேவேளை-
25 வயதுக்கு உட்பட்ட இளையோர் அனைவருக்கும் மாதாந்தம் 500 ஈரோக்கள் அவசர உதவித் தொகை வழங்குமாறு மூத்த அரசியல் பிரமுகர்கள் இருவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ ஆகிய இருவருமே கூட்டாக இந்த உதவித்திட்டத்தை அரசிடம் முன்மொழிந்துள்ளனர்.
“கொரோன வைரஸ் நெருக்கடியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற இளையோருக்கு குறிக்கப்பட்ட ஒரு காலப்பகுதிக்கு – குறைந்தது இந்த ஆண்டு இறுதிவரையாவது – அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 500 ஈரோக்கள் உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்” – என்று முன்னாள் அதிபர் ஹொலன்ட் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நல்லெண்ண முயற்சியாக மாணவர்களுக்கு உதவுவதற்காகத் திறக்கப்பட்ட பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு விஜயம் செய்த சமயத்திலேயே முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அதே நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாரிஸ் மேயர் கிடல்கோ, இளம் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் “உயிர்வாழ்வதற்கான உதவியாக” தலா 500 ஈரோக்கள் வழங்க வேண்டும் என்று அறிவித்தார்.
பிரான்ஸில் இளையோரில் மூன்றில் இரண்டு பங்கினர் வருமான வழிகளை இழந்தும் தனித்து விடப்பட்ட நிலையி லும் உள்ளனர். கொரோனா நெருக்கடி தணியும் வரையாவது அவர்களுக்கு அவர்களது பெற்றோரின் வருமானத்தைக் கணக்கில் எடுக்காது மாதாந்த உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் சமீப நாட்களாக வலுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் நெருக்கடி தீர்ந்தாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இளையோருக்கான நிதி உதவி குறைந்தது அடுத்த மூன்று ஆண்டுகளாவது வழங்கப்பட வேண்டும்.
-என்று பாரிஸ் மேயர் அண்மையில் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
குமாரதாஸன். பாரிஸ்.
05-02-2021