பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாவது நாள் பேரணி இன்று (5) வவுனியாவை வந்தடைந்த நிலையில் நிறைவுபெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி முல்லைத்தீவுக்குச் சென்று புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி ஊடாக வவுனியாவை அடைந்துள்ளது.
இந்நிலையில், நாளையதினம் காலை 7.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி மன்னார் மாவட்டம் நோக்கிப் பயணிக்கவுள்ளது.
முன்னதாக முல்லைத்தீவை இன்று வந்தடைந்த போராட்டக்காரர்களை வழிமறித்த முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவினைக் காட்சிப்படுத்திய போதிலும் போராட்டக்காரர்கள் அவற்றைப் பொருட்படுத்தாது தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அத்துடன், உடுப்புக் குளம் பகுதியில் கூடியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான மக்களையும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அங்கும் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு சிலாவத்தைச் சந்தியை அண்டிய பகுதிகளும் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கும் பெருமளவான மக்கள் போராட்டத்துடன் இணைந்து தமது ஆதரவினை வழங்கியருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் மாவட்டச் செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கிருந்து வாகனங்களில் வட்டுவாகல் பாலம் ஊடாக கோட்டாபய கடற்படைத்தளம் வரையில் பலத்த கோஷங்களுக்கு மத்தியில் பேரணி சென்றது.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்று அங்கு நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் மற்றும் ஒட்டுசுட்டான் ஊடாகப் பயணித்த பேரணியானது தற்போது நெடுங்கேணி நகரை அடைந்துள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி இருக்கின்றார்கள்.
இந்த பேரெழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி, வவுனியா சென்று மன்னார் ஊடாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.