பிரான்சில் “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாள்” கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (04.02.2021) வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணி முதல் 17.00 மணிவரை சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு , தமிழ் இளையோர் அமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்மொழி, பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் பலரும் எழுச்சி உரை நிகழ்த்தியிருந்தனர் .
பெருமளவான இளையோர்கள் தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு கலந்துகொண்டதுடன் சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலை குறித்த பதாதைகளை ஏந்தியவாறு பிரெஞ்சு மொழியில் குரல் எழுப்பியமை கடந்த காலங்களை கண்முன் நிறுத்தியது.
குறித்த நிகழ்வின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செந்நிறப் புகை வெளியிடப்பட்டது. இதனை வெளிநாட்டவர்கள் பலரும் அவதானித்துச் சென்றதைக் காணமுடிந்தது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு )