நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா மிகவும் பக்திபூர்வமாக இன்று நடைபெற்றது. ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இம்முறையும் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் நயினை அம்மனைத் தரிசிக்கத் திரண்டிருந்தனர்.
தேர் உற்சவத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை முதல் ஆலயத்துக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பொதுமக்களின் வசதி கருதி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணி முதல் குறிகாட்டுவான் வரையான இ.போ. ச, தனியார் பஸ் சேவைகள் இடம் பெறுகிறது.
நயினாதீவு குறிகாட்டுவான் மார்க்கத்தில் படகுச்சேவைகள் இன்று கூடுதலாக இருக்கும் என நயினா தீவு படகு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதைச் சேவையும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பெருமளவு பக்தர்கள் இம்முறை தேர்த்திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என்பதால் தொண்டர் சேவைகள் மற்றும் அத்தியாவசியக் குடிதண்ணீர் சுகாதார சேவைகள் உரிய முறையில் இடம்பெறும் என ஆலய அறங்காவலர்சபை, வேலணை பிரதேச செயலகம், வேலணை பிரதேச சபைகள் தெரிவித்துள்ளன.
பொலிஸார், கடற்படையினர் பாதுகாப்புப் பணிகளை முன்னெடுப்பார்கள். பெருமளவு பக்தர்கள் கலந்துகொள்வதால் ஆலயத்துக்கு வரும் அடியார்கள் நகைகளை அணிந்து வருவதைத் தவிர்த்துக்கொள்வது முக்கிய அறிவித்தலாக உள்ளது. உற்சவம் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெறக்கூடியதாக அனைவரும் ஒத்துழைப்புத்தர அறங்காவலர் சபை பொதுமக்களைக் கேட்டுள்ளது.
அமுதசுரபி அன்னதான சபை மற்றும் தாகசாந்தி நிலையங்களும் பொதுமக்களுக்கான தமது பணியை சிறந்த முறையில் வழங்கக்கூடியதான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. நாளை முதலாம் திகதி புதன்கிழமை தீர்த்தத்திருவிழாவும் மறுநாள் வியாழக்கிழமை தெப்பத்திருவிழாவும் இடம்பெறும்.