வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இன்று (3) உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வவுனியா பொலிஸார் தடை கோரிய நிலையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்தி்ருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களிற்கு குறித்த தடைஉத்தரவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தில்,
“வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரால் இன்று (3) முதல் எதிர்வரும் 6ம் திகதிவரை வவனியா ஏ 9 வீதியிலோ அல்லது தபால் காரியாலயம் முன்பாகவோ, பழைய பஸ் நிலையம் முன்பாகவோ 73 வது தேசிய சுதந்திரதினத்திற்கு எதிப்பு தெரிவித்து தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளை விடுவிக்காமை தொடர்பான கருத்துக்களை பிரதானமாக முன் வைத்து எதிர்ப்பு நடவடிக்கை செய்யவோ அல்லது ஆர்ப்பாட்டமோ, கால்நடை யாத்திரை போன்றவற்றை தடை செய்து, சண்முகராஜ் சறோஜாதேவி. சிவநாதன் ஜெனிற்றா, காசிப்பிள்ளை ஜெயவனிதா, கிறிஸ்தோப்பு கிருஸ்ணன்டயஸ் இராசமடு, ஆகியவர்களிற்கு 1979.இல 15 குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை பிரிவு 106 (1) இன் கீழ் கட்டளையிடப்படுகின்றது.
இது சம்பந்தமாக கருத்து கூற 2021.02.15 அன்று காலை 09.00 மணிக்கு கொளரவ நீதிமன்றிற்கு முற்படுமாறு கட்டளையிடுகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.