ஞாயிறு நள்ளிரவுக்குப்பின் பிரான்ஸில் இருந்து ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது. அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குப் பயணிக்க முடியும்.
பிரான்சின் பிரதமர் வெள்ளியன்று அறிவித்த போக்குவரத்துக் கட்டுப்பாடுகளின்படி இந்தத் தடை அமுலுக்கு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள், மற்றும் சுவிற்சர்லாந்து, அந்தோரா, நோர்வே, ஐஸ்லாந்து, மொனகோ, வத்திக்கான் தவிர்ந்த ஏனைய வெளிநாடுகளுக்குச் செல்வதற்கே புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதாரம் அல்லது மருத்துவ காரணம்(health), குடும்பம்(family) தொழில்(professional) ஆகிய மூன்று தேவைகளுக்காக மட்டுமே ஒருவர் வெளிநாடு செல்லலாம்.நாடொன்றுக்குப் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருப்போர், அதற்கான ஆதாரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட ஒர் அனுமதிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாடு செல்வோருக்கான அனுமதிப் படிவத்தையும் அதற்கு ஆதாரங்களாகச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் எவை என்ற விவரங்களையும் உள்துறை அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
விமான நிலையப் பரிசோதனைகளின் போது பயணத்துக்கான ஆதாரங்கள் சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆனாலும் வைரஸ் தொற்று நிலைமை சீராகும் வரை பயணங்களைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
31-01-2021