மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (28) காலை உணர்வுபூர்வமாக நினைவுகொள்ளப்பட்டது.
காவல்துறையினர் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும், நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது.
முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் எம்பிகளான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், முன்னாள் எம்.பி ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987ம் ஆண்டு இதேநாள் சிறிலங்கா அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பின் போது முதலைக்குடா இறால் வளர்ப்புப் பண்ணையில் வேலைசெய்த முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 87 பாெது மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி:உதயன்)