நாடெங்கும் மாலை ஆறு மணி முதல் அமுல் செய்யப்பட்டு வருகின்ற ஊரடங்கு (couvre-feu) கட்டுப்பாடுகள் வைரஸ் பரவலைத் தணிப்பதில் எதிர்பார்த்த அளவுக்குத் தாக்கம் செலுத்தவில்லை.
எனவே புதிய வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. மிக இறுக்கமான ஒரு முடக்கம் (“confinement très serré”) குறித்துப் பரிசீலிக்கப் படுகிறது. இதற்காக நாடளாவிய ரீதியிலான சில முக்கிய மதிப்பீடுகளின் தரவுகளை அதிபர் மக்ரோன் எதிர்பார்த்துள்ளார். அவை கிடைத்ததும் புதிய தீர்மானம் அறிவிக்கப்படும்.
எலிஸே மாளிகையில் நேற்று நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் முடிவில் அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் (Gabriel Attal) செய்தியாளர்களிடம் இத்தகவல் களை வெளியிட்டார்.
நாட்டில் தொற்று நிலைவரம் மூன்றாவது பொது முடக்கம் ஒன்றை அவசரமாக அமுல் செய்யவேண்டிய கட்டத்தை நெருங்கி உள்ளது. மாறுபாடடைந்த புதிய வைரஸ் கிருமிகளது பரவலின் தரவு உயர்ந்து செல்கிறது.
இதனால் நாட்டை முடக்கும் அறிவிப்பை அதிபர் மக்ரோன் இந்த வாரம் – பெரும்பாலும் புதன்கிழமை-வெளியிடுவார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தப் பின்னணியில் எலிஸே மாளிகையில் இன்று நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இன்றைய கூட்டத்தில் என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டன என்ற விவரங்களை அரசாங்கப் பேச்சாளர் வெளியிடவில்லை.
“தற்போது அமுலில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாட்டு வடிவம் வைரஸ் பரவலைக் குறைப்பதற்குப் போதாது. எனவே வேறு பல ஆய்வுகளும் வழிமுறைகளும் அவசியமாகின்றன” என்று அதிபர் மக்ரோன் இன்றைய கூட்டத்தில் குறிப்பிட்டார் என்ற தகவலை மட்டுமே அரசாங்கப் பேச்சாளர் வெளியிட்டார்.
மாறுபாடடைந்த புதிய வைரஸ் தொற்றுக்கள் தொடர்பான பிரதேசரீதியான புள்ளிவிவரங்கள் எதிர் வரும் சனிக்கிழமையே முழுமையாகக் கிடைக்கும் என்றும் அதன் பிறகே அரச உயர்மட்டம் புதிய நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
படம் :அரசாங்கப் பேச்சாளர் அட்டால் (Gabriel Attal)
குமாரதாஸன். பாரிஸ்.
27-01-2021