நாய், பூனைகளுக்கும் விரைவில் தடுப்பு மருந்து அவசியமாகலாம்: அறிவியலாளர்கள் எச்சரிக்கை!

0
208

வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தவேண்டுமாயின் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கு-குறிப்பாக நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு- வைரஸ் தடுப்பு மருந்துகளை இப்பொழுதே தயார் செய்தாக வேண்டும்.

தொற்று நோய் அறிவியலாளர் குழு ஒன்று இவ்வாறான முன்னெச்சரிக் கையை வெளியிட்டிருக்கிறது.

மனிதர்களுக்காகத் தயாரிக்கப்படுகின்ற தடுப்பு மருந்துகள் மட்டும் கொரோனா வைரஸை முற்றாக ஒழித்துவிடாது என்றும் மாற்றமடைந்து உருமாறக்கூடிய வைரஸ் கிருமிகள் வீட்டு மிருகங்கள், பண்ணை விலங்குகள் போன்றனவற் றுக்குத் தொற்றி மீண்டும் உலகில் பரவுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்றும் அந்த அறிவியலாளர் குழு எச்சரித்துள்ளது.

தொற்றுக்கள் மற்றும் நுண் உயிரியல் தொடர்பான மருத்துவத் தகவல்களுக் கான’ journal Virulence’ சஞ்சிகையில் இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது.

டென்மார்க்கில் மிங் விலங்குகள் இடையே வைரஸ் பரவியதை அடுத்து அவற்றைப் பல்லாயிரக்கணக்கில் கொல்லும் வேதனையான முடிவை அந்நாடு எடுக்க நேர்ந்ததை நினைவு படுத்தி உள்ள அறிவியலாளர்கள், அத்தகைய ஒரு நிலை வளர்ப்புப் பிராணிகளுக்கும் ஏற்படக்கூடும் என்பதை நினைக்காது இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் நாய், பூனை போன்ற மிருகங்கள் பெரிய அளவில் தொற்றுக்கு இலக்கானதாக இன்னமும் நிரூபிக்கப் படவில்லை.

ஆனால் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக புதுப்புது வடிவங்களை எடுக்கின்ற வைரஸ் காலப்போக்கில் வீட்டு விலங்குகளில் தொற்றாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முன்னெச்சரிக்கையாக ரஷ்யா வளர்ப்புப் பிராணிகளுக்கான வைரஸ் தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்கும் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

மனிதர்களிடையே மட்டும் சமூக இடைவெளியைப் பேணிக் கொண்டு விலங்குகள், பறவைகளை நெருக்கமாக கூண்டுகளில் அடைத்து வைப்பது எதிர்மாறானது. அவற்றின் வளர்ப்பிடங்கள் அடுத்து ஒரு வைரஸைப் பரப்பும் பிரதான மையங்களாக மாறிவிடலாம் என்று ஏற்கனவே பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

“கொவிட்- 19” வைரஸ் முதலில் வௌவால்களில் இருந்து வந்திருப்பினும் அதனை மனிதர்களுக்க்குப் பரப்பிய இடைநிலை விலங்கு பங்கோலின்களே என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால் அதனை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சீனாவில் வௌவால்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே வைரஸ் முதலில் தொற்றுவதற்கு மிங் விலங்குகள் காரணமாக இருந்திருக்கலாம் என்று இப்போது புதிய ஆய்வுகள் சொல்கின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.
26-01-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here