இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் புதிய விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் போராட்டமொன்று இன்று (26) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
‘இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் உயிரோடு விளையாடாதே. உலகமே எதிர்த்து நிற்கும் இனி உன்னை, விவசாய உற்பத்திகளை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும் காப்ரேட் நிறுவனங்கள் அல்ல. இந்திய மத்திய அரசே முடிவு செய்’ என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு சார்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் புதிய விவசாய சட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.
இந்திய இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்திய விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அதானி எனும் குறித்த முதலீட்டாளர், தற்போது இலங்கையிலும் சில முதலீடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை குறித்த நபருக்கு விற்க இந்த அரசு தீர்மானித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் ஒன்றுகூட்டுனர் அருன் ஹேமசந்திர,
‘கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் தாம் சுற்றுச் சூழலுடன் பாரிய ஈடுபாடுள்ளவராக சித்தரித்துக் கொண்டார். ஆனால் கடந்த வருடத்தில் மாத்திரம் ஒரு நாளைக்கு சுமார் 10 ஏக்கர் காணியானது அளிக்கப்பட்டது என்பதை அவர்களது தரவுகளே கூறுகிறது.
யானைக்கு மனிதர்களுக்கும் இடையிலான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது, சூழல் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது, தேசிய சொத்துக்கள் விற்கப்படும் பிரச்சினையும் அதிகரித்து வருகின்றது, இவற்றினை அரசு உடன் நிறுத்தாவிட்டால் பாரிய போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.