சிறிலங்கா கடற்படையின் அடாவடியில் 4 மீனவர்கள் பலியானதைக் கண்டித்துப் போராட்டம்!

0
189

சிறிலங்கா கடற்படையின் டோறா மோதி தமிழக மீனவர்களின் படகு மூழ்கி நான்கு மீனவர்கள் பலியானதைக் கண்டித்து இராமேஸ்வர மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கான அறிவிப்பை விடுத்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினரால்தான் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறியும்  மீனவர்களின் உடலை தமிழகத்துக்கு கொண்டு வந்து உடற்கூறு ஆய்வு செய்யக் கோரியும், இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியுமே இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப் போவதாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்ற போது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் அவர்கள் படகு மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளது. இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமாகினர். மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்கா கடற்படையினர் தேடி வந்த நிலையில் நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ். வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வரும் சிறிலங்கா அரசை கண்டித்தும் நாளை 24-ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here