யாழ்ப்பாணம் – நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் தொல்லியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தலைமையில் இன்று (21) வியாழக்கிழமை அதிகாலை முதல் திடீர் அகழ்வாராய்ச்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தால் திடீரென மேற்கொள்ளப்பட்டும் இந்த ஆய்வு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களால் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டது.
முன்னறிவித்தல் ஏதுமின்றி இந்தப் பணியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டுள்ள நிலையில் சம்பவத்தை அறிந்த வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாராஜா நிரோஷ் தலைமையிலான குழுவினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்பாதே இது ஒரு சாதாரண தொல்லியல் ஆய்வு. இந்த ஆய்வு தொடர்பாக நாம் அறிக்கை சமர்ப்பிப்போம். இந்த இடத்தில் சிலைகளோ அல்லது வேறு நிர்மாணங்களோ உருவாக்கப்பட மாட்டாது என்று தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஸ் தெரிவித்தபோது:-
“அகழ்வு பணியொன்று இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, சபை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, நான் சம்பவ இடத்திற்கு வந்தேன். வரும்போது அங்கு இராணுவத்தினரும் காணப்பட்டனர்.
அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது ஆராய்ச்சி பணிகளுக்காகவே அகழ்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் எமக்கு சந்தேகம் உள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் ஏதாவது அத்துமீறலை செய்யும் தோக்கில் செயற்படுகின்றனரா தெரியவில்லை. எனவே நான் இப்போதும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
(நன்றி:உதயன்)