பறவைக் காய்ச்சலையும் இலங்கை எதிர்கொள்ளும் அபாயம்!

0
224

இலங்கையில் வில்பத்து சரணாலயம் அமைந்துள்ள புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எலுவன்குளம், றால்மடு பிரதேச வயல்வெளிகளில் 2020டிசம்பர் பிற்பகுதியில் ஏராளமான பறவைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் வயல் குருவிகள், காட்டுக் குருவிகள், கறுப்பு வயல் குருவிகள் என அறியப்படும் பறவைகள் நூற்றுக்கணக்கில் காணப்பட்டன.  

இது தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்திய வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட அதிகாரிகள், ‘இப்பறவைகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனம் காரணமாக உயிரிழந்திருக்கலாம்’ என்றனர்.  

அதேநேரம் இத்திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ‘இப்பறவைகள் பறவைக் காய்ச்சலால் இறந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இருந்த போதிலும் இப்பறவைகளின் மாதிரிகள் மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.  

இவ்வாறான நிலையில் கடந்த டிசம்பர் மாத இறுதிப் பகுதியின் போது, இந்தியாவின் பல பிரதேசங்களிலும் பறவைகள் திடீர் திடீரென உயிரிழக்க ஆரம்பித்தன. இற்றை வரையும் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம், இமாச்சல் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 11மாநிலங்களில் இவ்வாறு பறவைகள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்திருக்கின்றன. கோழிகள், வாத்துகள், காகங்கள், புலம்பெயர்ந்து வரும் பறவைகள், மயில்கள், புறாக்கள், காகம் என்றபடி பல்வேறு பறவைகளும் உயிரிழந்த வண்ணமுள்ளன. இந்தியாவின் அப்பிரதேசங்களில் பறவைகள் செத்து மடிவது தொடர்கின்றது. 

இப்பறவைகள் உயிரிழப்பதற்கு பறவைக் காய்ச்சலே காரணம் என இந்திய மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக இமாச்சல் பிரதேசத்தில் உயிரிழந்த காட்டு வாத்துகளிலும், ராஜஸ்தானில் உயிரிழந்த காகங்களிலும், ஹரியானாவில் உயிரிழந்த வளர்ப்புக் கோழிகளிலும், கேரளாவில் உயிரிழந்துள்ள வாத்துகளிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் அவற்றின் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் (எவியன் இன்புளுவென்ஸா) வைரஸ்தான் காரணம் என்பது உறுதிப்பட்டிருக்கன்றது.  

அந்த வகையில் இற்றை வரையும் பல்லாயிரக்கணக்கான பறவைகள் இந்தியாவில் உயிரிழந்துள்ளன. அவற்றில் புலம்பெயர்ந்து வந்துள்ள பறவைகளும் அடங்கியுள்ளன.  

இதன் விளைவாக இந்தியாவின் பல பறவைகள் சரணாலயங்களும் பறவைகள் நோக்குமிடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளன.  

இப்பறவைக் காய்ச்சல் நோய் புலம்பெயர் பறவைகள் ஊடாக இந்தியாவுக்குள் வந்திருக்கலாமென இந்திய மத்திய கால்நடை த்துறை சந்தேகம் தெரிவித்திருக்கின்றது. பொதுவாக வருடா வருடம் செப்டம்பர் முதல் ஐரோப்பா உள்ளிட்ட உலகின் குளிர்ப் பிராந்தியங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் புலம்பெயர்ந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு வருகை தருவது வழக்கம்.    உணவு, இனப்பெருக்கம், சீதோஷண நிலை உள்ளிட்ட காரணங்களின் நிமித்தம் வருகை தரும் இப்பறவைகள் மறுவருடம் மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை இப்பிராந்தியங்களிலேயே தங்கி இருக்கும். அதன் பின்னர் அவை தம் பூர்வீக இடங்களுக்குத் திரும்பி விடும்.  

அந்த வகையில் இலங்கைக்கு மாத்திரம் சுமார் 250இனங்களைச் சேர்ந்த பறவைகள் வருடா வருடம் வருகை தருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சம்பத் செனவிரட்ன தெரிவிக்கின்றார். அவ்வாறாறெனில் இலங்கையை விடவும் இரண்டு, மூன்று மடங்கு அதிகமான புலம்பெயர் பறவைகள் இந்தியாவுக்கு வருகை தர முடியும்.    அதேநேரம் இந்தியாவின் இமாலயப் பிராந்தியத்திலுள்ள சில பறவைகள் குளிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரக் கூடியனவாக இருப்பதையும் மறந்து விட முடியாது.  

இவ்வாறான நிலையில் வண்ணாத்திவில்லு, இறால்மடு பிரதேசத்தில் பறவைகள் இறந்த காலமும் இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் பறவைகள் இறக்கத் தொடங்கிய காலமும் கிட்டத்தட்ட ஒரே காலமாக விளங்குகின்றன. அதன் காரணத்தினால் வண்ணாத்திவில்லு, இறால்மடு பிரதேச வயல்வெளிகளில் பறவைகளின் இறப்பு பறவைக் காய்ச்சல் காரணமாக இடம்பெற்றிருக்குமோ என்ற சந்தேகம் சூழலியலாளர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. 

ஏனெனில் இலங்கையும் இந்தியாவும் அயல்நாடுகளாக இருக்கின்ற அதேநேரம், புலம்பெயர் பறவைகள் இரு நாடுகளுக்கும் ஏககாலத்தில் வருகை தரக் கூடியனவாக இருக்கின்றன. இதே காலப் பகுதியில்தான் இமாலயப் பிராந்தியப் பறவைகளும் இலங்கைக்கு வருகை தருகின்றன.  

 ‘பொதுவாக பறவைக் காய்ச்சல் தொற்றுக்கு உள்ளான பறவையொன்று பறக்கும் போது இடுகின்ற எச்சம் காற்றில் கலந்து அவை ஏனைய பறவைகளுக்கு சுவாசப் பாதை வழியாகத் தொற்ற முடியும்’ என்று குறிப்பிட்டுள்ள டொக்டர் பரூக் அப்துல்லா, ‘கோழிப்பண்ணைகளில் குறுகிய இடப்பரப்பில் அதிக கோழிகள் பராமரிக்கப்படுவதால் ஒரு கோழிக்கு இத்தொற்று ஏற்படுமாயின் முழுப் பண்ணையிலுள்ள கோழிகளுக்கும் இத்தொற்று விரைவாகப் பரவுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.   அதனால் வண்ணாத்திவில்லு, இறால்மடு பிரதேசத்தில் பறவைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தை விரைவாகக் கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. இதேவேளை பல புலம்பெயர் பறவைகள் நாட்டுக்குள் ஏற்கனவே வந்து சேர்ந்துள்ளன. சில பறவைகள் இப்போதும் வந்த வண்ணமுள்ளன. இன்னும் சில பறவைகள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மாறி மாறி தங்கி இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் பரவும் பறவைக் காய்ச்சல் இலங்கைக்குள் வந்து சேர்ந்து விடுமா என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கின்றது.  

அதன் காரணத்தினால் இந்தியாவில் பரவும் பறவைக் காய்ச்சல் இலங்கைக்குள் வந்து சேர்வதைத் தடுப்பது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிக அக்கறையும் முக்கியத்துவமும் அளித்து செயற்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அந்நோய் உள்நாட்டு பறவைகளுக்கும் பெரும் ஆபத்தாக அமைந்து விடலாம். அவ்வாறன நிலைமை ஏற்பட இடமளிக்கக் கூடாது.  

அதேநேரம் இந்தியாவில் உயிரிழந்த பறவைகளை ஆய்வுக்கு உற்படுத்தியதன் மூலம் அவை H5N8வகை வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்திருக்கின்றது. இவ்வகை வைரஸ் 1983இல் அயர்லாந்து கோழி, வாத்து பண்ணைகளிலும், 2016 _17காலப் பகுதியில் நெதர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், நைஜீரியா, ஸ்பெய்ன், ஸ்லோவேனியா, உகண்டா, சிம்பாபே, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வளர்ப்புக் கோழி மற்றும் வாத்து பண்ணைகளிலும் காட்டுப் பறவைகளிலும் பரவியுள்ளன. அத்தோடு சவூதி அரேபியாவில் இப்பறவைக் காய்ச்சல் 2020இல் மீண்டும் பதிவாகியுள்ளது.  

என்றாலும் இவ்வகை வைரஸ் இற்றை வரையும் மனிதருக்கு தொற்றியதற்கான சான்றுகள் இல்லை. இது ஒருவரில் இருந்து மற்றவருக்கு தொற்றக் கூடிய வாய்ப்பும் மிகவும் குறைவு’என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.  

ஆனால் 1997இல் ஹொங்கொங்கில் H5N1இனத்தைச் சேர்ந்த வைரஸ், பறவைகள் விற்பனைச் சந்தையில் இருந்து மனிதர்களுக்கு பரவியமையையும் மறந்து விட முடியாது. அச்சமயம் இத்தொற்றுக்கு உள்ளானவர்களில் 6பேர் உயிரிழந்தனர். தற்போது இந்தியாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் எவரும் உயிரிழந்ததாகப் பதிவுகள் இல்லை.  

இருந்த போதிலும் 70பாகை செல்சியஸ் வெப்பத்தில் கோழி இறைச்சியையும் முட்டையையும் நன்கு அவித்து சமைத்து உண்ண வேண்டும். முட்டைகளைப் பச்சையாகச் சாப்பிடுவதையும் மாமிசத்தை அரைகுறையாக சமைத்து உண்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.   ஆகவே இந்தியாவில் பரவும் பறவைக் காய்ச்சல் நாட்டுக்குள் வந்து சேருவதையும் அதன் தொற்றுக்கு உள்நாட்டு பறவைகள் உள்ளாவதையும் தவிர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்ப நன்கு அவித்து சமைத்து உண்பதில் கவனம் செலுத்தவும் தவறக் கூடாது.  

(இணையத்தில் இருந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here