கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிப்பது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இன்னும் சிரமமாக இருக்கக்கூடும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எளிதில் தொற்றக்கூடிய புதிய வகை வைரஸ் உலகளவில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அவசரகாலப் பிரிவுத் தலைவர் மைக் ரயன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிரிட்டனிலும் தென்னாப்பிரிக்காவிலும் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த புதுவகை வைரஸ், தற்போது சுமார் 50 நாடுகளில் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதன் மிக அண்மைய அறிக்கையில், கடந்த வாரம் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஐந்து மில்லியன் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதாகத் தெரிவித்தது.
விடுமுறை காலத்தில் பலரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவரக் கடைப்பிடிக்காததால் தொற்று அதிகரித்து இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
“வைரஸ் தொற்று நிலவரம் மேம்படுவதும் மோசமடைவதுமான இந்தப் போக்கு தொடருமோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நாம் இன்னமும் சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மரியா வேன் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தடுப்பூசிகளால் புதுவகை வைரஸைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போகலாம் என்ற அச்சமும் பலரிடையே எழுந்துள்ளது.