அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களில் பெய்த கடும் மழையினால் அங்குள்ள தாழ்நில பிரதேசங்களில் குடியிருப்புகள், வீட்டுத்தோட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை, புதுநகர் முதலாம் பிரிவு மற்றும் பாலமுனை ஆறாம் பிரிவு, திராய்க்கேணி தமிழ் கிராம சேவகர் பிரிவு பிரதேசம் என்பன வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு வாழ்கின்ற குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பாலமுனை- 6, திராய்க்கேணி தமிழ் கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியிருந்தன.
அங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழிலான வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் நீரில் மூழ்கின.
திராய்க்கேணி கிராமத்தில் காணப்படுகின்ற இரண்டு ஆலயங்களின் வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் மழை காரணமாக முற்றாக நீரில் மூழ்கிக் காணப்பட்டதால் வழமையாக இரு ஆலயங்களில் கொண்டாடப்படுகின்ற விசேட தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை இடம்பெறவில்லை.
தொடர்மழை காரணமாக அங்குள்ள மக்களின் குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. இதனால் தத்தமது வீடுகளில் இருந்தபடியே பெரும் சிரமத்துக்கு மத்தியில் அவர்கள் தைப்பொங்கல் கொண்டாடியதை அவதானிக்க முடிந்தது.
அக்கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகால் முறையாக நிர்மாணிக்கப்பட்டு முழுமையாக முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக மழை காலங்களில் வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்கின்றது. இதனால் தமது வாழ்வாதார தொழிலான வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தின் முக்கியஸ்தரும் ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவருமான எஸ்.கார்த்திகேசு உட்பட அங்குள்ள மக்கள் மிக கவலையுடன் தெரிவித்தனர்.
திராய்க்கேணி கிராமத்திலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த யுத்த கால சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்து சென்று வேறு இடங்களில் வாழ்ந்தன. அங்கு தற்காலிகமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் வந்து தங்களது கிராமத்தில் பல சிரமத்துக்கு மத்தியில் காடு வெட்டி குடியேறி தமது வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அக்கிராமத்தில் காணப்படுகின்ற வீட்டு வசதிகள் உட்பட அடிப்படைத் தேவைகள் இன்னும் நிவர்த்திக்கப்படாமல் இருப்பது அங்குள்ள மக்களுக்கு வேதனையளிக்கின்றது.