யாழ்.பல்கலையில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு!

0
175

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவையே எமது மூச்சு எனவும் இதற்காக உரத்து ஒலிப்போம் என்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மக்கள் பேர் எழுச்சியாகத் திரண்ட பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நிறைவு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், இரண்டு நிமிடங்கள் மௌன மரியாதை செலுத்தப்பட்டதுடன் மற்றும் மலர் தூவி பொங்கு தமிழ் பிரகடன 20ஆம் ஆண்டு நிறைவுநாள் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கை வாசித்துக் காட்டப்பட்டது.

குறித்த அறிக்கையில், “முள்ளிவாய்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் தங்களது நினைவு உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு காலப் பின்னணியில் நாங்கள் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூறுகின்றோம்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 17இல் தமிழ் மக்கள் தங்களது இன உரிமைகளை வலியுறுத்தி உலகெங்கும் அவற்றைப் பறைசாற்ற மிகுந்த எழுச்சியோடு இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடினார்கள்.

அவ்வாறாக அவர்கள் ஒன்றுகூடி வந்தபொழுது மேற்கொண்ட பிரகடனத்தை நாம் இங்கு கல்வெட்டாக வடித்து வருடா வருடம் நினைவு கூறுகின்றோம். தமிழ் மக்களது அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்கின்ற விடையங்களை இந்தப் பிரகடனம் உள்ளடக்கி நிற்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த பொங்கு தமிழ் உலகின் பல நாடுகளிலும் அங்கங்கு வாழும் தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் தமிழ் மக்களது அடிப்படை அபிலாசைகளை எடுத்துரைத்து வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இந்த பொங்கு தமிழ் நிகழ்வும், இங்கு நிறுவப்பட்டிருக்கும் பொங்கு தமிழ் பிரகடன கல்வெட்டும் பறைசாற்றி நிற்கின்றது.

காலாதி காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எடுத்துவந்த தமிழ்த் தேசிய நிலைப்பாடு, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் நமது பொங்கு தமிழ் பிரகடன நினைவுகூரல் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆகவே, மீண்டும் ஒருமுறை இந்த வருடமும் சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here