பாரிஸ் பிராந்தியத்தில் இன்று பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வீதிகள் சறுக்குவதற்கு வாய்ப்புள்ளதால் வீதிகளைப் பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறும் பயணங்களைத் தள்ளிவைக்குமாறும் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பொலீஸ் அவசர சேவைப் பிரிவின் குளிர் காலத் திட்டத்தின் இரண்டாவது நிலை(level 2) செயற்படுத்தப்படும் என்றும் வீதிப் போக்குவரத்துகளைப் பாதுகாத்து பராமரிப்பது உட்பட தீவிர பணிகளில் பொலீஸார் ஈடுபடுவர் என்றும் பொலீஸ் தலைமையகம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிருடன் பனி பொழியக் கூடும் என்பதால் இல்-து-பிரான்ஸ் பிராந்தியம் அடங்கலாக நாட்டின் 13 வடக்கு மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை காலை முதல் செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுக்கப்படுவதாக காலநிலை அவதான மையமான Météo France தெரிவித்துள்ளது.
Pas-de-Calais, Somme, Nord, Aine, Oise, Seine-et-Marne, Val-d’Oise, Paris, Yvelines, Essonne, Seine -Saint-Denis, Val-de-Marne Hauts-de-Seine ஆகிய மாவட்டங்களிலேயே செம்மஞ்சள் நிலை அறிவிக்கப்பட் டுள்ளது.
பிரான்ஸில் அண்மைய ஆண்டுகளில் இருந்திராதவாறு ஜனவரி மாதத்தின் கடந்த 15 நாட்களில் நாடெங்கும் அதிக பனி வீழ்ச்சி பதிவாகி உள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
16-01-2021