பிரான்ஸில் அரசு முன்னெடுத்துவரும் நாடளாவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் புற்றுநோயாளர் மற்றும் உள் உறுப்புகள் மாற்றியோர் உட்பட தீவிர நோயாளிகளுக்கு வைரஸ் ஊசி ஏற்றப்படவுள்ளது.
முன்னுரிமை அடிப்படையிலான இத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது என்று சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்படி தீவிர நோய் நிலைமை உள்ளவர்களது விவரங்கள் அறுவிக்கப்பட்டுள்ளன. அவை –
*புற்றுநோய் மற்றும் தீவிர ஹமோட்டெலஜி உள்ளவர்கள் மற்றும் ஹீமோதொரபி (chemotherapy) சிகிச்சை பெற்றுவருவோர் –
*இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை (dialysis) உட்பட நாட்பட்ட தீவிர சிறுநீரக வியாதிகள் உள்ளோர் –
*உள் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை (solid organ transplant) செய்தவர்கள், திசு மாற்ற (stem cell transplantation) சிகிச்சைக்கு உட்பட்டோர் –
*குறைந்தது இரண்டு உறுப்பு செயலிழப்புடன் கூடிய நாட்பட்ட நோயாளிகள் –
- மரபணுக் கோளாறுகளுடன் (genetic disorder) தொடர்புபட்ட trisomy 21 நோயாளிகள் –
-போன்றோருக்கே முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளது. வைரஸ் தொற்றுக்கு இலகுவில் இலக்காகும் வாய்ப்பு உள்ளவர்களில் இவர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர்.
மேற்கண்ட தீவிர நோயாளிகள் சுமார் எட்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இதற்கென நாடு முழுவதும் திறக்கப்படவுள்ள 700 நிலையங்களில் அடுத்த வாரம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை – 75 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான முன் பதிவுகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றன.
அத்தகையோர் சுகாதார அமைச்சின் www.sante.fr என்ற இணையத் தளத்தில் அல்லது 0800 009 110 என்ற விசேட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்வதன் மூலம் இரண்டு தடவைகளுக்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியும்.
தனிப்பட்ட மருத்துவர்களது இணைய சேவைகளான Doctolib, Keldoc, Maiia போன்றவற்றின் ஊடாகவும் பதிவு செய்துகொள்ள முடியும்.
குமாரதாஸன். பாரிஸ்.
15-01-2021