பிரான்ஸின் பிரதமர் தனது ஐந்து அமைச்சர்கள் சகிதம் இன்று மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நாடு முழுவதும் மாலை ஆறு மணி தொடக்கம் மறுநாள் காலை ஆறு மணி வரையான – 12 மணிநேர – இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
ஏற்கனவே 25 மாவட்டங்களில் நடைமுறையில் இருந்த இந்த ஊரடங்கு நேரமாற்றம் தற்போது நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை தொடக்கம் குறைந்தது அடுத்துவரும் 15 நாட்கள் நாடெங்கும் அது நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரம் நீடிக்கப்படுவதால் மாலை ஆறுமணிக்குப் பிறகு நடமாடுவது தொடர்பான விதிகள் பல புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அவசர தேவைகளுக்காக அனுமதிப்படிவத்துடன் நடமாடுகின்ற முறை தொடர்ந்து அப்படியே அமுலில் இருக்கும்.
ஆறு மணிக்குப் பின்னர் முடிவடையும் பாடசாலைகள், பகல் பராமரிப்பு நிலையங்களில் இருந்து மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கும் அத்தகைய மாணவர்களைப் பெற்றோர்கள் பாதுகாவலர்கள் அத்தாட்சிப் படிவத்துடன் வந்து அழைத்துச் செல்வதற்கும் ஊரடங்கு நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலைத் தளங்களில் இருந்து மாலை ஆறு மணிக்குப் பிறகு வெளியேறுவோர் வழமையான அத்தாட்சி பத்திரங்களை வைத்திருக்க வேண்டும்.
வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எல்லைச் சோதனைகள் இறுக்கப் படுகின்றன. ஜரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து வருவோர் தொற்றற்றவர் என்பதை உறுதி செய்யும் பரிசோதனை அறிக்கை (negative test)வைத்திருக்க வேண்டும். அத்துடன் ஏழு தினங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கும் அதன் பிறகு ஒரு பரிசோதனைக்கும் இணங்க வேண்டும்.
உள்ளக விளையாட்டுப் பயிற்சிகள் அனைத்தும் சில வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றன.
வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மாலை ஆறு மணியுடன் மூடப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாகத் தடுப்பூசி தேவைப்படும் பலவீனமானவர்கள், நோய்ப் பாதிப்புகள் உடைய அனைவருக்கும் வயதுக் கட்டுப்பாடு இன்றித் தடுப்பூசி ஏற்றும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
புதிய மரபு மாறிய வைரஸின் தீவிரமான பரவலால் அயல் நாடுகள் பலவும் இறுக்கமான பொது முடக்கங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. பிரான்ஸ் இப்போதைக்கு இரவு ஊரடங்கு நடைமுறை மூலம் அந்த வைரஸை எதிர்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.
நத்தார் விடுமுறைக்குப் பின்னர் எதிர்பார்க்கப்பட்டது போல் தொற்று நிலைமை மிக மோசமான கட்டத்துக்குச் செல்லவில்லை. அது கட்டுக்குள் இருக்கிறது. இது ஒரு முன்னேற்றகரமான அறிகுறி என்று பிரதமர் இன்று சுட்டிக்காட்டினார்.
ஆனாலும் நாடெங்கும் புதிய வைரஸ் பரவல் காணப்படுவதால் அடுத்து வரும் நாட்களில் நிலைமையை மதிப்பிட்டு புதிய கடுமையான கட்டுப்பாடுகளை எடுக்க வேண்டி வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குமாரதாஸன். பாரிஸ்.
14-01-2021