மட்டக்களப்பு – களுவாஞ்சிடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 11 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடாத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் பெரியகல்லாறு பிரதான வீதியில் நேற்று (13) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பேது சிறுமியின் மரணம் கொலையெனவும் குறித்த சிறுமியின் கொலைக்கு நியாயம் வேண்டும் எனவும் கோசமெழுப்பினர்.
பேரணியாக பிரதான வீதியில் சென்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மட்டக்களப்பு –கல்முனை வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் 48 மணித்தியாலத்திற்குள் அவர்களை கைது செய்வோம் என வழங்கி உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.