பிரான்சில் குளிர் காலத்தில் பரவும் சுவாச தொற்றுநோய்கள் குறைந்தன!

0
201

பிரான்சில் வழமையாக குளிர் காலத்தில் பரவும் சுவாச தொற்றுநோய்கள் குறைந்தன.
மாஸ்க், சமூக இடைவெளி காரணம் எனச் சுட்டிிக்காட்டப்பட்டுள்ளது.

குளிர்காலப்பகுதியை அண்டி பரவும் காய்ச்சல், இருமல் போன்ற பருவகால நோய்கள் வெகுவாகக் குறைந்திருப்பது குறித்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸில் இக் காலப்பகுதியில் இன்புளுவன்ஸா(influenza) சளிச்சுரம் உட்பட பல குளிர்கால சுவாச நோய்கள் வேகமாகப் பரவித் தங்கள் பணிச்சுமையை அதிகரிப்பதை நினைவுபடுத்தியுள்ள மருத்துவர்கள், இந்தத் தடவை அந் நோய்கள் அருகி விட்டன என்பதை ஆச்சரியத்துடன் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பொதுவாக் குளிர் காலத்தை அண்டி இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகின்ற மூச்சுக் குழாய் அழற்சித் தொற்று நோயும் (bronchiolitis) கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக மிகவும் குறைந்து விட்டது என்ற தகவலை பிரான்ஸின் துளூஸ் பிராந்திய போதனா மருத்துவமனை நிபுணர் Isabelle Claudet வெளியிட்டுள்ளார்.

சளி, காய்ச்சல் என்று கூறிக்கொண்டு நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருவது குறைந்துள்ளதால் தங்களது முழு நேரத்தையும் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் செலவிட முடிகிறது என்று மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடிக் கழுவுதல், நெருங்கிக் கட்டியணைக்காத சமூக இடைவெளி போன்ற பழக்க வழக்கங்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் காரணமாகவே ஏனைய பல சுவாசத் தொற்று நோய்களின் தாக்கங்களும் குறைந்து விட்டன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
11-01-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here