முற்றவெளியதைக் கடக்கும்போது கண்ணுக்குள் வருமே ஞாபகம் இருக்கா….?

0
245

ஞாபகம் இருக்கா….?


பட்டதுயரங்கள்
பலகோடி இருக்கே..
எப்படி மறப்பது
எழுபத்தி நாலை…
ஆச்சியின் ஆட்சியில்
ஆடிய பேய்கள்
படுகொலை செய்யப்
பழகிய காலம்….
ஞாபகம் இருக்கா…?

தாய்மொழி மீது
காதல் கொண்டு
ஆராய்ச்சி செய்ய
விழாவதை எடுக்க
நாலாம் முறையாய்க்
கூட்டிய கூட்டம்
முற்றவெளியினில்
நடந்ததே அன்று
ஞாபகம் இருக்கா….?

உலகப் பரப்பில்
வாழ்ந்த தமிழன்
ஒன்றாய்ச் சேர்ந்து
விழாவதை எடுக்கத்
தடைகளைப் போட்டுத்
தடுக்க நினைச்சவர்…
இறுதி நாளினில்க்
காவு வாங்கிய
ஒன்பது தமிழரை
ஞாபகம் இருக்கா…?

தடைகள் தாண்டி
நடந்தது கூட்டம்..
பொறுக்குமா அந்தப்
பேரினவாதம்…?
சாட்டுச் சொல்லிச்
சுட்டது…அடிச்சது…
உயிர்க்கொடை கொடுத்ததில்
மாணவர் மூவர்…
இருந்தனர் என்பது
ஞாபகம் இருக்கா….?

அவர்களின் நினைவாய்க்
கட்டிய ஆலயம்
எத்தனை தடவைகள்
இடித்தனர் என்பதும்
இப்போ புதிதாய்த்
தொடங்கிய பணியும்…
முற்றவெளியதைக்
கடக்கும் போது
கண்ணுக்குள் வருமே
ஞாபகம் இருக்கா….?

சிறீமா ஆச்சி
இல்லைத் தானே…
சிங்கள ஆட்சி
இன்னும் இருக்கே
எப்படி மறப்பீர்
தமிழரே என்று…
இன்றும் அவர்கள்
ஞாபகப் படுத்த
எடுக்கும் முயற்சிகள்
எத்தனை என்று
ஞாபகம் இருக்கா….?

மாநாடு நடந்த
அந்தத் திடலே
அதுக்குப் பிறகு
வந்த காலம்
முத்தமிழ் விழாச்
செய்தோம் என்பதும்
இந்த நாளினில்
நினைச்சுப் பார்க்க
ஞாபகம் இருக்கா…?

எத்தனை காலம்
கடந்திட்ட போதும்….
எத்தனை தடவை
இடிச்சிற்ற போதும்…
நினைவுகள் சுமந்து
கட்டிய இடங்கள்…
ஞாபகம் இருக்குது
எமக்கு என்பதை…
எண்ணிப் பார்க்கத்
தவறிய அரசிடம்
ஞாபகம் இருக்கா….? என்று கேள்..!

றோய் மதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here