
இடிப்பதும் அழிப்பதும்
அந்தப் பேரினவாத அரசுக்குப்
புதிதா என்ன …?சொல்லுங்கள்
அன்று இனத்தை அழித்தவன் -இன்று
நீதியைக் கேட்டுநின்ற
தூபியை இடிக்கின்றான்
அவனுக்கு அது நியாயம்தான்….!
உயிரைக் கொடுத்து
விடுதலை கேட்டு
வலியைச் சுமந்தோம் -அதை
நினைக்கவும் தடையெனச்
சொல்லிக் காட்டிச்
சட்டம் போட்டான்
அவனுக்கு அது நியாயம்தான்…..
முள்ளிவாய்க்காலில்
முடிஞ்சது கதையென
நினைச்சு இருந்தவன்
நித்திரை தொலைத்து
படைகளைக் கொண்டு
இடிச்சுத் தொலைச்சிற்றான்
அவனுக்கு அது நியாயம்தான்…..!
எம் இனத்தை அழிச்சுப்
பல ஆண்டுகள் கடந்தும்
இதயச் சுத்தி இல்லாத அரசு
சர்வதேச நீதிக்குப் பயந்து
இருட்டினில் சாட்சியை
அழிக்க நினைச்சது
அவனுக்கு அது நியாயம்தான்…..!
பல்கலை நிழலில் சாட்சியாய் நின்ற
நினைவுத்தூபியை இடிக்கச்சொன்னான்
கொரோனா பரவும் காலம்பார்த்துப்
படைகளை ஏவி இடிக்கச்சொன்னான்
அதுக்குத்துணையாய் கடிதம் அனுப்பி
அறிஞரைக் கூட வெருட்டிவிட்டான்
அவனுக்கு அது நியாயம்தான்…..!
ஆனாலும்…..
உரிமையைக் கேட்டு உறவை இழந்து
வலிகளைச் சுமந்து நீதியைக் கேட்ட- எங்கள்
இனத்தின் உணர்வதை ஏனோ
எண்ணிப் பார்க்க மறந்து விட்டான்…
இந்த நேரம் ஒன்றாய்க் கூடி
நீதியைக் கேட்டு வாங்க வேண்டும்…
வேற்றுமை நீங்கி ஒற்றுமையாக
அரசியல் சேர்த்து எம்மினம் கூடி
உரத்த குரலினில் நீதியைக்கேட்டு
உணர்வதைக் கொட்டிக் களத்தினில் நின்று
யுத்தம் செய்யும் காலமிது-இதனை
விட்டால் எமக்கு நீதி கிடைக்குமா…?
எமக்கு இதுதான் நியாயம் வாங்க….!
சர்வதேசம் திரும்பிப் பார்க்க
எமக்கான நீதியைக் கேட்டுநிற்க
எல்லாத் தமிழரும் ஒன்றாய்ச்சேர்ந்து
இடிச்சது எதற்கெனக் கேள்விகேட்டு
அழிந்த இனத்தின் குரலாய் எழுந்து
எமக்கான நீதியைக் கேட்க வேண்டும்
எமக்கு இதுதான் நியாயம் வாங்க…..!
றோய் மதி