ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பணியாளருமான ந.கேசவராஜன் இன்று 09.01.21 அதிகாலை மாரடைப்பினால் காலமானார்.
யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 1962 ஆம் ஆண்டு பிறந்த இவரின் உடலம் சுதுமலையில் உள்ள இவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஈழ தமிழர்களின் பேச்சுவழக்குப் பாணியை திரைப்படத்தில் வெளிப்படுத்தி வெற்றிகண்ட இயக்குனர்களின் வரிசையில் ஒருவராக திகழ்ந்த இவர் 2009 ஆம் ஆண்டிற்கு முந்திய காலத்தில் வடக்கில் திசைகள் வெளிக்கும், பிஞ்சுமனம், கடலோரக்காற்று, அம்மாநலமா போன்ற போர்க்கால பிரபல திரைப்படங்களை இயக்கியிருந்தவர்.
திரைப்பட துறையில் விடாது தமிழர்கள் தடம் பதிக்கவேண்டும் என்று பல்வேறு மாணவர்களுக்கு தனது அனுபவங்களை பயிற்சிகள் ஊடாக கற்றுக்கொடுத்துள்ளதுடன் போருக்குப் பின்னரும் தொடர்ந்தும் திரைப்படத் துறையில் செயற்பட்ட அவர், பெருமளவான குறும்படங்களை இயக்கியதுடன் நடிகராகவும் நடித்திருந்தார்.
பனைமரக்காடு என்கிற படத்தினையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அண்மையில் பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வருகை தந்து புலம்பெயர் ஈழத்துக் கலைஞர்களையும் நண்பர்களையும் சந்தித்து கடந்து வந்த கலைப் பயணங்களையும் வாழ்வியலையும் பகிர்ந்து திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் சினிமாத்துறையில் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது இன்னிலையில் இன்னும் பல சாதனைகளை, படங்களை உருவாக்கவேண்டிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை கலைஞர்கள் மற்றும் ஈழ தமிழ் திரைப்படத்துறையில் பாரிய இழப்பாகக் காணப்படுகின்றது.