ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால் தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை! பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை!

0
201

பைசர் – பயோஎன்ரெக் தடுப்பூசியை முதல் முறை ஏற்றிக்கொண்ட ஒருவர் அடுத்த மூன்று வார காலப்பகுதியில்- 21நாட்களுக்குள் – இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம். அப்போதுதான் அதன் நோய் எதிர்ப்புச் சக்தி முழுமையாகப் பலன் அளிக்கும்.

அவ்வாறு அன்றி இரண்டாவது ஊசியை ஏற்றவேண்டிய காலத்தை மூன்று வாரங்களுக்கு மேல் இழுத்தடித்தால் முதலாவது தடுப்பூசியின் முழுமையான பலன் கிட்டாது போகலாம்.

தங்களது தடுப்பூசி இரண்டாவது முறை ஏற்றாமல் ஒரே தடவையில் மட்டும் பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று ‘பைசர் – பயோஎன்ரெக்’ நிறுவனங்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் வெவ்வேறு அளவீட்டு விதிமுறைகளில் மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் அது மனிதர்களில் பரிசீலிக்கப்பட்டபோது அவர்கள் இரண்டு தடவைகள் ஊசி மருந்தைப் பெற்றனர். தடுப்பூசியின் அதிகபட்ச பாதுகாப்பிற்கு அது இரண்டு முறை கொடுக்கப்பட வேண்டும். பொதுவாக, இரண்டாவது ஊசி முதல் மூன்று வாரங்களுக்குள் ஏற்றப்பட வேண்டும்.”-என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரோய்ட்டர் செய்தி நிறுவனம் இன்று இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

பல நாடுகளும் வைரஸ் பரவும் வேகத்துடன் போட்டா போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி போடும் திட்டங்களை வேகமாக முன்னெடுக்க முயற்சிப்பதால் ஊசி மருந்துக்குப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. தேவைக்கு ஏற்ப அவற்றை விநியோகிக்க முடியாமல் உற்பத்தி நிறுவனங்கள் ஓடிமுழிக்கின்றன.

இதனால் சில ஜரோப்பிய நாடுகள் தமது பிரஜைகளுக்கு இரண்டாவது ஊசி போடவேண்டிய திகதியை தத்தமது வசதிக்கு ஏற்ப இஷ்டத்துக்கு ஒத்திவைத்து வருகின்றன.

டென்மார்க் இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை ஆறு வாரங்களாகவும், பிரித்தானியா 12 வாரங்களாகவும் அனுமதித்திருக் கின்றன.

ஜேர்மனியும் மிக அதிகமானோருக்கு ஒரே தடவையில் ஊசி ஏற்றும் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டி இருப்பதால் இரண்டாவது ஊசி க்கான கால இடைவெளியை நீடிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை –

ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை ஏற்றிய நபர் ஒருவருக்கு மற்றொரு உற்பத்தி நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டாவது முறை ஏற்றுவது குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஒருவருக்கு மாறி மாறி இருவேறு வகை ஊசிகளை ஏற்றுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.
05-01-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here