பாகிஸ்தானில் 11 சுரங்கத்தொழிலாளர் படுகொலை:ஐ.எஸ் உரிமைகோரல்!

0
361

மேற்கு பாகிஸ்தான் மாகாணமான பலுகிஸ்தானில் 11 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.எஸ். குழு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை கடத்திச் செல்லப்பட்ட இந்தத் தொழிலாளர்கள் அந்த நிலக்கரிச் சுரங்கத்திற்கு அருகில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை ஹசரா ஷியாக் குழுவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். ஷியா இஸ்லாத்தை பின்பற்றுவதால் இந்த சிறுபான்மையினர் அடிக்கடி இலக்காகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை கண்டித்திருக்கும் பிரதமர் இம்ரான் கான் ‘பயங்கரவாதிகளின் மனிதாபிமானம் அற்ற செயல்’ என்று கூறியுள்ளார்.

மாகாணத் தலைநகர் குவாட்டாவில் இருந்து தொலைவில் உள்ள ஆப்கான் எல்லையை ஒட்டி இருக்கும் சிறு நகர் ஒன்றிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பலுகிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரியதும் வறியதுமான பிராந்தியமாகும்.

ஆயுததாரிகள் இந்த சுரங்கத் தொழிலாளர்களை அவர்களின் குடியிருப்பில் இருந்து இரவு நேரத்தில் அருகில் இருக்கும் மலைப் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

மீட்பாளர்கள் வந்தபோதும் ஏற்கனவே ஆறு பேர் உயிரிழந்திருந்ததோடு மேலும் ஐவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிய கூடாரம் ஒன்றில் அனைவரதும் கைகள் ஒன்றாகக் கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவர்களில் உடல்கள் நிலத்தில் கிடக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here