சிரிய கொபேன் நகருக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் வியாழக்கிழமை மீளப் பிரவேசித்துள்ளனர்.
இதன்போது தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுத் தாக்குதல் உள்ளடங்கலான தாக்குதல்களில் குறைந்தது 35 பேர் பலியானதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி நகரை குர்திஷ் படையினர் 5 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் படையினரின் வான் தாக்குதல்களின் உதவியுடன் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நகரை மீளக் கைப்பற்றும் நடவடிக்கையின் போது சிரிய – துருக்கிய எல்லைப் பிராந்தியத்தில் உக்கிர மோதல் இடம்பெற்றதாகவும் இதன்போது பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுவதாகவும் சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.
துருக்கிய எல்லைக் கடவைக்கு அண்மையிலுள்ள பிராந்தியத்தில் தற்கொலைக் குண்டுதாரியொருவர் குண்டை வெடிக்க வைத்ததையடுத்தே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகள் மோதல்களில் அடையாள ரீதியான தோல்வியை தழுவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையிலேயே ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொபேன் நகர் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த வார ஆரம்பத்தில் ரக்கா நகரிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகங்களுக்கு சுமார் 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள முக்கிய அயின் இஸா நகரை குர்திஷ் படையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நகர் கைப்பற்றப்பட்டமையானது ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரதான விநியோகப் பாதையை துண்டிப்பதாக உள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொபேன் நகருக்கு சுமார் 270 மைல் தொலைவில் வட கிழக்கு சிரியாவிலுள்ள ஹஸ்ஸகெக் நகருக்கு அண்மையிலுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை கைப்பற்றும் முகமாக உக்கிர தாக்குதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகள் கடந்த பல மாதங்களாக ஹஸ்ஸகெக் நகரை கைப்பற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
மேலும் சிரிய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் தென் நகரான டெராவிலுள்ள பிரதேசங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கப் படையினர் வான் தாக்குதல்களின் துணையுடன் கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்துள்ளனர்.
சிரியாவில் கடந்த 4 வருட காலமாக இடம் பெற்று வரும் மோதல்களில் சிக்கி 200,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
Close