வடக்கில் இருவருக்கு நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தைக் கொரோனாக் கொத்தணியைச் சேர்ந்தவராவார்.
மருதனார்தடம் கொரோனாக் கொத்தணியை அடுத்து இவர் தெல்லிப்பழையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அதை மீறி அவர் வட்டக்கச்சி, இராமநாதபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அதையறிந்த சுகாதாரப் பிரிவினர், அவரை அங்கு தனிமைப்படுத்தியிருந்தனர்.
அவரது மாதிரிகள் எடுக்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்காக அநுராதபுரம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் அவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பொறியியல் பீட வளாகத்தில் கற்கும் மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் வவுனியாவைச் சேர்ந்தவர். கற்கைகளைத் தொடர வளாகத்துக்கு வந்த நிலையில், அவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 124 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் நேற்றுக் கிடைத்த நிலையில், அவர்களில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாகவும் சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர்.