திட்டமிட்டபடி பாடசாலைகள் நாளை ஆரம்பம் : கல்வி அமைச்சர் அறிவிப்பு!

0
516

பிரான்ஸில் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் திட்டமிட்டபடி நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று தேசிய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்திருக்கிறார்.

முழு விழிப்பு நிலையுடன் நாளை பள்ளி செல்வதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று இன்று மாலை BFM தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கல்வி அமைச்சர் கூறினார்.

ஏனைய பொது இடங்களுடன் ஒப்பிடும் போது பாடசாலைகள் 0.3 வீதமான தொற்று வீதத்தையே கொண்டுள்ளன என்பதை நினைவூட்டிய அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் நாளை முதல் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

பிரித்தானியாவிலும் ஜேர்மனியிலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர், சில நாடுகள் குறிப்பிடும் அளவுக்குப் பெரும் தொற்றுப் பரவலை எதிர்கொண்டுள்ளன.குறிப்பாக இங்கிலாந்து ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கி றது – என்று தெரிவித்தார்.

விடுமுறை மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப்பிறகு வைரஸ் தீவிரமாகப் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதால் பாடசாலைகளை ஆரம்பிப்பதைத் தாமதப்படுத்துமாறு பெற்றோர்கள் மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

(படம் :BFM தொலைக்காட்சி.)

குமாரதாஸன். பாரிஸ்.
03-01-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here