திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள்!

0
350

தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் கடந்துவிட்டது.

இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

2006 சனவரி 2 ஆம் நாள் திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள்.

இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:

மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)
யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)
லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)
தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)
சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)

இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

இறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டது.

எல்லைகளற்ற செய்தியாளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 யூலை 5 அன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை ஆகத்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திருகோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அப்பாவி மாணவர்கள் மீதான இப் படுகொலைகள் இடம்பெற்று 15 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here