பாரிஸில் இன்றிரவு 200 நிலக்கீழ் தொடருந்து நிலையங்கள் மூடல்!

0
762

பாரிஸைப் பொறுத்தவரை இன்றைய இரவு வழமையான புத்தாண்டு இரவுகள் போன்று இருக்காது. ஈபிள் கோபுரப் பகுதியில் இரவிரவாக நடக்கும் இன்னிசைக் களியாட்டங்கள்,கண்கவர் வாணவேடிக்கைகள் எதுவும் இந்தமுறை இல்லை.

எலிஸே மாளிகையில் இருந்து அதிபர் மக்ரோன் நாட்டு மக்களுக்கு விடுக்கும் புத்தாண்டுச் செய்தி இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்.

அவசியமற்ற நடமாட்டங்களை முற்றாகத் தடுக்கும் நோக்கில் பாரிஸ் நகர மெற்றோ ரயில் சேவைகள் இன்றிரவு குறைக்கப்படுகின்றன. பல வழித்தடங்களில் சேவைகள் முற்றாக நிறுத்தப்படுகின்றன. இருநூறுக்கும் மேற்பட்ட மெற்றோ ரயில் நிலையங்கள் இன்றிரவு முழுவதும் மூடப்பட்டிருக்கும்.

பாரிஸ் பொலீஸ் தலைமையகத்தின் வேண்டுகோளை அடுத்து போக்குவரத்து நிறுவனமான RATP இந்தத் தீர்மானங்களை அறிவித்துள்ளது.

நகர மெற்றோ வலைப்பின்னலில் lines 1, 2, 4, 6, 8, 9, 13, 14 ஆகிய வழித்தடங்களில் மட்டுமே இன்றிரவு 21மணிக்குப் பின் சேவைகள் இடம்பெறும். அதுவும் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற நேர வித்தியாசத்தில் ரயில்கள் பயணிக்கும்.

இந்த வழித்தடங்களில் Charles-de-Gaulle – Etoile, Champs Elysées, Trocadéro ஆகிய நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

lignes 3, 3bis, 5, 7, 7bis, 10, 11, 12 ஆகிய வழித்தடங்களில் சேவைகள் இரவு 20.30 மணிக்குப் பின் முற்றாக நிறுத்தப்படும்.

பஸ் மற்றும் ட்ராம் சேவைகள் வழமை போன்று இடம்பெறும்.

ஊரடங்கை இறுக்கமாக அமுல்ப்படுத்தி புத்தாண்டு ஒன்று கூடல்களைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு லட்சம் பொலீஸார் மற்றும் ஜொந்தாம் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வுள்ளனர்.

நாடு முழுவதும் புத்தாண்டு இரவில் குளிர், மழை, பனிப்பொழிவு போன்றவற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல் – து-பிரான்ஸ் பிராந்தியத்திலும் இன்றிரவு முதலாவது பனிப் பொழிவு நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்
31-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here