மன்னாரில் காணாமல் போன கிராமசேவகர் சடலமாக மீட்பு!

0
248

மன்னாரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலர் இன்று வியாழக்கிழமை காலை அரிப்பு பழைய தோணித்துறை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலர் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலராக கடமையாற்றும் 26 வயதுடைய ஜனார்த்தனன் என தெரிய வந்துள்ளது.

நான்கு கிராம அலுவலர்கள் உட்பட்ட 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கிராம அலுவலகர்கள் ஆற்றில் குளித்த போது ஒரு கிராம அலுவலர் காணாமல் போனதோடு, ஏனைய கிராம அலுவலர்கள் மீட்கப்பட்டனர்.

காணாமல் போன கிராம சேவையாளர் நானாட்டான் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதோடு அவரை தேடும் பணி இரண்டு நாட்களாக இடம்பெற்றுள்ளது.

கடற்படை மற்றும் வங்காலை, அரிப்பு கிராம மீனவர்களும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். எனினும் காணாமல் போனவர் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அரிப்பில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை அரிப்பு பழைய தோணித்துறை பகுதியில் கண்டு, அரிப்பு ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில் மீட்டுள்ளனர்.

அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி கிராம அலுவலர்கள் உட்பட்ட 6 பேரூம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையிலே குறித்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here