யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் மணிவண்ணன் 21 வாக்குகளையும், முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் 20 வாக்குகளையும் பெற்றனர்.
இதன்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் மேயராகத் தெரிவாகியுள்ளார்.
மாநகர சபையின் மேயர் தெரிவுக்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது மேயர் வேட்பாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இது தொடர்பான வாக்கெடுப்பைப் பகிரங்கமாக நடத்துவதா அல்லது இரகசியமாக நடத்துவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது, சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றே கோரியிருந்தனர். இதன்படி மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும், மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்தன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் என 4 பேர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தனர்.
இதற்கமைய யாழ். மாநகர சபையின் புதிய மேயராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சபையில் அறிவித்தார்.
கடந்த 16ஆம் திகதி யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநகர மேயராகப் பதவி வகித்த இ.ஆனோல்ட் தனது பதவியை இழந்திருந்தார். இதனால் புதிய மேயரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.