தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்!

0
302

பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.

அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக நடத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இன்றிரவு ‘பிரான்ஸ் -2’ தொலைக்காட்சி யில் கேள்வி – பதில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் Olivier Véran இத்தகவலை வெளியிட்டார்.

உடனடியாகத் தேசிய மட்டத்தில் நாட்டை முடக்கும் திட்டங்களை அவர் நிராகரித்தார். மாறாக தொற்றுத் தீவிரமாக உள்ள நாட்டின் கிழக்கு மாவட்டங்கள் உட்பட ஆபத்தான பகுதிகளில் தற்சமயம் இரவு 20.00 மணி தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு நேரத்தை மாலை 18.00 மணியாக அதிகரிப்பதற்குப் பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிரான்ஸில் கிழக்குப் பிராந்தியங்களான Grand-Est, Bourgogne-Franche-Comté, Alpes-Maritimes பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்சமயம் நிலவும் கடும் குளிர் காலநிலை வைரஸ் பரவலுக்குச் சாதகமாக அமைவதாக அறிவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை –

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு வைரஸ் “கட்டுப்படுத்த முடியாத வகையில் மீளெழுச்சியுடன் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று அரசுக்கு ஆலோசனை வழங்கும் சுகாதார அறிவியல் நிபுணர்கள் குழு(Scientific Council) தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டிருக்கும் நிபுணர் குழுவின் அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
29-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here