யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ம் ஆண்டு 8 பேரை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2000 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளின் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கொலை சம்பவம் தொடர்பில் 5 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ சார்ஜன்ட் 8 பேரை கொலை செய்தமைக்கான போதுமான சாட்சியங்கள் இருப்பதால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய 4 பேருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொது மக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போது 2000 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களினால் அடுத்த நாள் 20ம் திகதி படுகொலை செய்யப்பட்டுப் புதைக் கப்பட்டார்கள். மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற் காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரி களிடம் இருந்து அனுமதி பெற்று டிசம்பர் 19ம் நாள் மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதை யுண்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை அங்கு கண்டிருந்தனர். அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத் தகவலை பகிர்ந்து கொண்டு மிருந்தனர். அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங்காண முற்பட்ட வேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.
இவர்களுள் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொது மகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் பலத்த காயங்க ளுடன் இத்தாக்குதல்களில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன.
அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல் துறையினரால் மீட்கப் பட்டிருந்தன.
இப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது சர்ச்சைக்குரிய பெண்ணின் சடலம் பற்றியும் சாவகச்சேரி நீதிமன்றில் சாட்சிகள் வாக்கு மூலமளித் திருந்தனர். எனினும், நீதிபதி முன்னிலையில் தேடுதல் நடத்தப்பட்டிருந்த போதும் அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் பின்னர் கண்டுபிடிக் கப்பட்டிருக்கவில்லை.
மாவட்ட வைத்திய அதிகாரி மரு. சி.கதிரவேற்பிள்ளையின் சாட்சியப்படி, கொலை செய்யப்பட்டவர்களின் கழுத்து வெட்டப்பட்டுள்ளன. கொல்லப்பட் டவர்களில் மூவர் பதின்ம வயது சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராசா பிரசாத் ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட் டவர்கள்.
இதனை அடுத்து நடந்த விசாரணைகளை அடுத்து ஐந்து இராணு வத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர்.
சட்டவிரோதக் கைது, சித்திரவதை, படுகொலை மற்றும் புதைகுழிகளில் புதைத்தமை உட்படப் 17 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், பெண் ஒருவரின் உடல் அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் பல உடல்கள் இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
மிருசுவில் பகுதியில் புதைகுழிகளைத் தேட உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மனித உரிமைக் குழுக்கள் பல இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை அடுத்து 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2002, மே 20 ல் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை 2002 நவம்பர் 27ல் சட்டமா அதிபர் நியமித்தார்.
ஜூரிகள் எவரும் இல்லாமல் இவ்வழக்கை விசாரிப்பதற்கு அரசு தீர்மானித்தது.
இவ்வழக்கு பின்னர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது. மூவரடங்கிய நீதிபதிகள் குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 2011, ஏப்ரல் 28 ல் சென்று பார்வையிட்டது. கொலைகள் நடைபெற்ற இடம், கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருந்த இடம், அடையாள அணிவகுப்பு நடத்தப் பட்ட நீதிமன்ற வளாகம் ஆகியவற்றை இந்த நீதிபதிகள் மூன்று பேரும் பார்வையிட்டு அதற்கான விபரக் குறிப்புக் களைப் பதிவு செய்தனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, எச்.என்.பி.பி.வராவெள, சுனில் ராஜபக்ஷ ஆகிய மூன்று நீதிபதிகளும் பிரதி சட்டமா அதிபர் சரத் ஜயமான மற்றும் அதிகாரிகளுமே மிருசுவில் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை நடத்திய அப்போதைய சாவகச்சேரி மாவட்ட நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், சந்தேக நபர்கள் மீதான அடையாள அணிவகுப்பை நடத்திய அப்போதைய பதில் நீதவான் சுப்பிர மணியம் கந்தசாமி, இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் தரப்பில் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டார ஆகியோர் நீதிபதிகள் குழுவினருக்கு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை அடையாளம் காட்டினர். நீதிபதிகள் குழுவினருடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து இராணுவத்தினரும் மிருசுவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.