“பெல்லா” புயல் காற்றுடன் (Tempête Bella) கூடிய காலநிலை பாரிஸ் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் பிராந்தியத்தில் 90 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசிவருவதால் பூங்காக்கள், பொழுதுபோக்கு தோட்டங்கள் மற்றும் இடுகாடுகள் (parcs, jardins et cimetières) பாதுகாப்புக் கருதி மூடப்பட்டிருக்கின்றன.
இங்கிலாந்து தீவுகளில் இருந்து உருவாகிய பெல்லா புயல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சனிக்கிழமை மாலை பிரான்ஸினுள் பிரவேசித்தது. நாட்டின் மேற்பகுதிகளில் (Hauts-de-France) குறிப்பாக Brittany, Normandy போன்ற இடங்களில் பலத்த காற்றினால் மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளன. சுமார் 16 ஆயிரம் வீடுகளுக்கு மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
புயலினால் உருவாகிய குளிர் காலநிலையை அடுத்து நாட்டின் மத்திய பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. Aveyron, Antal, Corrèze, Lozère, Puy-de-Dôme ஆகிய ஐந்து மாவட்டங்களில் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
காற்றுடன் கூடிய குளிர் காலநிலை நாளை திங்கட்கிழமையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
27-12-2020