78 வயதுப் பெண்ணுக்கு முதல் தடுப்பூசி; பாரிஸ் செவ்ரனில் இன்று தொடங்கியது!

0
174

பாரிஸ் புறநகரான செவ்ரனில்(Sevran) 78 வயதான பெண்ணுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இன்று முற்பகல் 11மணிக்கு செவ்ரனில் உள்ள பொது உதவி மருத்துவமனையில் தடுப்பூசி ஏற்றும் வைபவம் தொடக்கி வைக்கப்பட்டது. அங்கு நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் தங்கியிருந்த வயோதிபப் பெண் ஒருவருக்கே மருத்துவத் தாதி ஒருவர் தடுப்பூசியை ஏற்றினார்.

பாரிஸ் பொது உதவி மருத்துவமனை களின் பணிப்பாளர் ஒறலியன் ரூசோ (Aurélien Rousseau) முதலாவது தடுப்பூசி ஏற்றும் நிகழ்வை “நிறைந்த நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு வலுவான முக்கிய தருணம் ” என்று வர்ணித்திருக்கிறார்.

நாட்டின் தெற்கில் Dijon நகரிலும் தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் இன்று காலை தொடக்கி வைக்கப்பட்டது. அங்கு 65 வயதான இருதய சிகிச்சை மருத்துவ நிபுணர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டது.

65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள், மருத்துவப் பணியாளர்கள் இருபது பேருக்கே இன்றைய தினம் தடுப்பூசி ஏற்ற தீர்மானிக்கப்பட்டிருந்தது.

“வைரஸுக்கு எதிராக ஓர் புதிய ஆயுதம் கிடைத்துள்ளது. அனைவரும் ஒன்றாக அதனைப் பற்றிப் பிடிப்போம்” -என்று அதிபர் மக்ரோன் இன்றைய தனது ருவீற்றர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஜரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளிலும் இன்று டிசெம்பர் 27 ஆம் திகதி தடுப்பூசி ஏற்றும் முதலாவது நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸின் புகழ்பெற்ற உயிரியல் துறை அறிவியலாளர் லூயி பஸ்தரின் (Louis Pasteur) பிறந்த தினம் இன்றாகும்.
அத்துடன் விசர் நாய்க்கடி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் இன்றைய தினமே ஆகும்.

(படம் :Twitter screenshot)

குமாரதாஸன். பாரிஸ்.
27-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here