மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவுக்கு நாங்கள் செய்யக் கூடிய ஆத்மார்த்த அஞ்சலி அவர் விட்டுச் சென்ற பாதையை நாங்கள் தொட்டுச் செல்வதாகவே அமைய வேண்டும்.
அந்தவகையில் ஒரு முற்றுமுழுதான சர்வதேச விசாரணைகளின் மூலமாக நீதி கேட்பது தான் அவருக்கு நாங்கள் செய்யக் கூடிய உண்மையான அஞ்சலியாகவிருக்கும் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்தார்.
யாழிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(25) பிற்பகல் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் இடைவெளி இற்றைவரை நிரப்பப்படவில்லை. கிழக்கு மண்ணிலிருந்து அந்தத் தலைவனின் இடைவெளியை நிரப்பக் கூடிய தலைவர்களை உருவாக்குவது எங்களின் வரலாற்றுக் கடமையாக நாங்கள் உணர்கின்றோம்.
அந்த வரலாற்றுக் கடமையைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நிச்சயம் செய்தே தீரும்.
அவரது மரணம் கூட இனப்படுகொலையின் ஒரு வடிவாகத் தான் அமைந்துள்ளது. அந்தவகையில் அவருக்கும், தமிழ்த்தேசத்திற்கும் நாங்கள் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமையாக ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு நீதி கேட்கின்ற அந்த வரலாற்றுக் கடமையை முன்கொண்டு செல்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜோசப் பரராஜசிங்கத்தின் பாதையில் அனைவரும் அணிவகுக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.