ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் – பாப்பரசர்

0
527

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நேற்று நத்தார் பண்டிகை கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக நேற்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

வத்திக்கான் நகரில் உள்ள புகழ்பெற்ற சென் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்மஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

பாப்பரசர் பிரான்சிஸ் நேற்றைய நத்தார் செய்தியை வாசித்தார். அதில், ‘இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்மஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்’ என்று கூறினார்.

இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ளதால், பொது மக்கள் வத்திக்கான் தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. நேற்றைய பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here